2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

முன்னாள் நீதவானுக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2016 ஜூன் 14 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு, வழங்கப்பட்டிருந்த பிணையை இரத்துசெய்த கொழும்பு மேல் நீதிமன்றம், எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்றுத் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மேலதிக நீதவானுக்குப் பிணை வழங்கி, அவரைக் கைது செய்வதற்கான உத்தரவை, கங்கொடவில நீதிமன்ற நீதவான் கனிஷ்க விஜேரத்ன, கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமையன்று பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவையையே, எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் இடைநிறுத்திய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டார்.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட விண்ணப்பத்தை பரிசீனைக்கு உட்படுத்தியதன் பின்னரே, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் 2ஆம் திகதி வியாழக்கிழமை, அவர் சரணடைந்தார்.

சட்டத்தரணியுடன் சரணடைந்த அவர், 5 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில், அன்றைய தினமே கங்கொடவில நீதவான் கனிஷ்க விஜேரத்னவினால் விடுவிக்கப்பட்டார்.
அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டுத் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தன்னுடைய சட்டத்தரணி சகிதம் சரணடைந்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வழக்கை முன்னகர்த்துவதற்கான பிரேரணை ஊடாக 1ஆம் திகதி புதன்கிழமையன்று மீண்டும் அழைக்கப்பட்டு, தாக்கல் செய்த மேலதிக அறிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திலின கமகேவை, சட்டமா அதிபரின் ஆலோசனை, அத்தோடு, விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், கைதுசெய்யவேண்டும் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் அன்று கொண்டுவந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .