2025 ஜூலை 26, சனிக்கிழமை

“மாகாண சபைகளை பலவீனப்படுத்த முயற்சி”

Editorial   / 2025 ஜூலை 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைகளை சகல அமைச்சுகளும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து அமைச்சிடம் கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் பல வீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்திருந்தோம். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எமது மாவட்டத்தில் அதிகமான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டவை, அதேபோன்று பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகளும் உள்ளன. ஆனால் இவற்றுக்கான நிதிகளை மத்திய அரசாங்கமே வைத்திருக்கின்றன. மாகாண சபைகளுக்கு கீழுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் கேட்க முடியாது. இந்நிலையில் உங்கள் அமைச்சின் கீழ் மாகாண அமைச்சுக்கு ஏதேனும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒழுங்குகள் உள்ளனவா? என்றார்.

இதன்போது பதிலளித்த போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன கூறுகையில், வீதிகள் பல வகை உள்ளன. அவற்றில் மாகாண சபைகளுக்கு உரித்தான வீதிகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. நிதி மற்றும் தொழில்நுட்பம் என்பன கிடையாது. இதனால் அந்த வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியாத நிலமைகள் உள்ளன. எனினும் நாங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக இவ்வாறான வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுத்து அதை அபிவிருத்தி செய்யவும், தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.


இதனிடையே குறுக்கிட்டு கருத்துரைத்த சாணக்கியன், கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சரிடம் வைத்தியசாலைகள் தொடர்பாக கேட்ட போது மத்திய அரசாங்கம் மாகாண வைத்தியசாலைகளை எடுத்து சிறந்த வைத்தியசாலைகளை அமைக்கப் போவதாக கூறியுள்ளீர்கள். அதே போன்று நீங்களும் மாகாண வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுத்து செய்யப் போவதாக கூறியுள்ளீர்கள். இதற்கு நிதி இல்லை என்பதே காரணமாகும்.


இந்நிலையில் மாகாண சபைகளை பலவீனமாக்கும் செயற்பாடுகளை எல்லா அமைச்சுகளும் செய்கின்றன. மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்தாமல் ஏன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நிதிகளை ஒதுக்க முடியாது என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X