Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 22 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை 2023 ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக நான்காவது தடவை இலங்கைக்கான இருதரப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவருடன், புதுடில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சின் உயரதிகாரிகள் நால்வரடங்கிய உத்தியோகபூர்வ பேராளர்கள் குழு ஒன்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
முன்னதாக 2019 நவம்பர், 2021 ஜனவரி மற்றும் 2022 மார்ச் ஆகிய காலப்பகுதிகளில் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்திருந்த வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ எம்.யூ.எம்.அலி சப்றி அவர்களுடனும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேராளர்கள் மட்டத்திலான சந்திப்பொன்றில், துறைமுகம் கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி செல்வா, சுகாதாரத்துறை அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல, கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன் இச்சந்திப்பின் மூலம் பல்வேறு துறைகளிலும் இந்தியா – இலங்கை இடையில் வளர்ந்துவரும் ஒத்துழைப்பின் ஆழம் மற்றும் விஸ்தீரணம் பிரதிபலித்தது.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொண்டிருந்த சந்திப்பானது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பினை வழங்கியது.
நாடு பல்வேறு சவால்கள் ஊடாக பயணிக்கும் இச்சூழலில், தான் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் விஜயமானது, இலங்கை மக்களுக்காக இந்திய மக்களினதும் இந்திய அரசாங்கத்தினதும் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படுமென்ற தெளிவானதும் வலுவானதுமான செய்தியினை பிரதிபலிக்கின்றதென வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னொருபோதும் இல்லாத வகையில், இந்திய அரசாங்கத்தால் கடந்த வருடம் வழங்கப்பட்ட நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியானது இந்தியாவின் அயலுறவுக்குமுதலிடம் கொள்கைக்கு அமைவாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடன் வழங்கிய நாடுகளுள், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவினை வழங்கிய முதலாவது நாடாக இந்தியா உள்ளதென சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு உதவும் வகையிலும் இலங்கையின் சிறந்த எதிர்காலத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி ரீதியான உத்தரவாதத்தினை வழங்கிய நாடாகவும் இந்தியா உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் பல்வேறு துறைகளிலும் பாரியளவான முதலீட்டினை மேற்கொள்வதற்கு இந்தியா ஊக்குவிப்பினை வழங்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்பு குறித்து கொள்கை அளவில் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டையும் அவர் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வருகைதந்த போது அடிக்கல் நாட்டப்பட்ட பள்ளேகல கண்டிய நடன அக்கடமினையும் ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒன்றிணைந்து மெய்நிகர் மார்க்கமூடாக அங்குரார்ப்பணம்செய்துவைத்தனர்.
இலங்கையின் உயர்ந்த கலாசார பாரம்பரியத்தினை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இந்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டினை நன்கொடை அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல காலி, கண்டி, நுவரெலியா, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 350 வீடுகளும் இச்சந்தர்ப்பத்தில் மெய்நிகர் மார்க்கமூடாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின்கீழ் அமுல்படுத்தப்படும் தனித்தனித் திட்டங்களின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கப்படுவதனை உறுதிப்படுத்தும் கடிதங்களும் இந்தியா மற்றும் இலங்கை இடையில் பரிமாறப்பட்டன.
அத்துடன் பாரியளவிலானதும் மக்களை மையமாகக் கொண்டதுமான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமையினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையின் பொதுப்போக்குவரத்து கட்டமைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் கடனுதவி திட்டம் ஒன்றின் அடிப்படையில் வழங்கப்படும் 500 பஸ்களில் 50 பஸ்கள் வெளியுறவுத்துறை அமைச்சரால் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் மீட்சியினையும் உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு ஆளுமைவிருத்தி திட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக இலங்கை மக்களுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை இலங்கையில் பல்வேறு துறைகளிலும் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் பல்நோக்கு அடிப்படையிலான உதவிகள் உறுதிப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கப்பல் சேவைகள் வெகு விரைவில் ஆரம்பமாகுமென நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் இலங்கைக்கான உல்லாசப் பயணிகளின் மிகப்பெரிய மூலாதாரமாக இந்தியா தொடர்ந்தும் உள்ளதெனச்சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையில் மதரீதியான சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை உறவுகளை மேம்படுத்த முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இருநாட்டு மக்களிடையிலான சிறந்த தொடர்புகளை கட்டிஎழுப்பவும் பகிரப்பட்ட செழுமையை நிலைநிறுத்தவும் வழிசமைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டில் புத்த பெருமானின் புனித கபிலவஸ்து சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்தவேண்டுமென இலங்கையின் சிரேஷ்ட தலைமைத்துவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய அரசாங்கம் சாதகமாக பரிசீலிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.
இரு நாடுகளின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையிலும் அதேபோல இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவினைக் குறிக்கும் வகையிலும் முத்திரை மற்றும் நாணயங்கள் வெளியிடப்பட்டமை தொடர்பாகவும் இச்சந்தர்ப்பத்தில் அவர் தனது கருத்துகளை முன்வைத்திருந்தார்.
அத்துடன் இந்த விஜயத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் அவர்கள் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சஜித் பிரேமதாச அவர்களையும் அவர் சந்தித்திருந்தார். அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK), ரெலோ (TELO), புளொட் (PLOTE), ஈ.பி.ஆர்.எல்.எப் ( EPRLF), தமிழ் தேசியக் கட்சி (TNP), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF), ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் அவர் சந்திப்புகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களால் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் சமூக மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் எடுத்துரைக்கப்பட்டதுடன் அம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்தியாவின் ஆதரவும் கோரப்பட்டது. பிராந்திய மேம்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல முன்னெடுப்புக்களை சுட்டிக்காட்டிய வெளியுறவுத்துறை அமைச்சர், 2023 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்ததன் 200 ஆண்டுகளைக் குறிப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை இச்சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றிவரும் கண்டியிலுள்ள உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஸ்தாபிக்கப்பட்டு இவ்வருடம் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை ஜனாதிபதியுடனும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் இருவேறு சந்தர்ப்பங்களில் நடைபெற்ற சந்திப்புகளின்போது மீன்பிடி விவகாரம் மற்றும் அதனோடிணைந்த விடயங்கள் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.
இந்த சவால்களை மனிதாபிமான முறையில் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். மீனவர்கள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதற்கான முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளான வாழ்வாதாரம் குறித்த கவலைகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்துகளை தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர், இருதரப்பினருக்கும் இசைவான கிட்டிய திகதியொன்றில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிரதமர் விடுத்த அழைப்பினையும் ஜனாதிபதியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடல்மார்க்கத்தில் மிகவும் நெருக்கமான அயல் நாடாக இந்தியாவின் ‘அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் இலங்கை கொண்டிருக்கும் முக்கிய இடத்தினை வெளியுறவுத்துறை அமைச்சரின் இவ்விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அத்துடன் இலங்கையில் சுபீட்சத்தினை ஏற்படுத்தவும் பொருளாதார மீட்சியினை துரிதகதியில் உறுதிப்படுத்தவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரோகார்பன், உற்பத்தித்துறை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மருந்துப்பொருட்கள் போன்ற இலங்கைக்கு முன்னுரிமையளிக்கும் துறைகளில் நீண்டகால முதலீட்டுக்கான முயற்சிகளை மீண்டும் இரட்டிப்பாக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் இந்த விஜயம் எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
29 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
29 minute ago
32 minute ago
36 minute ago