2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

மாணவனுக்கு விஷம் கொடுத்த மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை

Editorial   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவை யூனியன் பிரதேசம் காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படித்த மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய அந்த மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவருக்கு ரூ 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தன் மகளை விட அவருடன் படிக்கும் மாணவன் நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்த ஆத்திரத்தில் அந்த சிறுவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் பால மணிகண்டன். இவர் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த சிறுவன் தனது வீட்டிற்குச் சென்றான். அப்போது தனது தாயிடம், குளிர்பானத்தை குடித்ததில் இருந்து தனக்கு மயக்கமாக இருப்பதாக கூறியுள்ளான்.

இதை சொல்லிக் கொண்டிருந்த போதே பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனால் பதறிய அந்த மாணவனின் தாய், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு மாணவனை தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது விசாரணையில் சிறுவன் குடித்த குளிர்பானத்தில் விஷம் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் யார் கொடுத்தது என விசாரித்த போது மாணவரின் தாய் கொடுத்ததாக குளிர்பானத்தை பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாய், அப்படி ஒரு குளிர்பானத்தை தான் யாரிடமும் கொடுத்தனுப்பவில்லை என கூறி, தனது கணவரை அழைத்துக் கொண்டு பள்ளி காவலாளியை விசாரித்த போது, பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாதான், பாலமணிகண்டனின் தாய் என கூறி அந்த குளிர்பானத்தை கொடுக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து மாணவியின் தாய் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயிடம் விசாரணை நடத்தப்பட்டதில் சிறுவன் தனது மகளை விட சிறப்பாக படித்ததால் ஆத்திரமடைந்து அவனுக்கு குளிர்பானத்தில் எலி விஷம் கலந்து கொடுத்து தினம் தினம் கொன்றதாக தெரிவித்தாராம்.

இந்த விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போதே சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மாணவியின் தாய் சகாயராணி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை 3 ஆண்டுகளாக காரைக்கால் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் மாணவனை கொன்ற தாய் சகாயராணிக்கு ரூ 20 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகளாக நினைப்பதுதான் தாய்மை, அப்படிப்பட்ட தாய், பொறாமையால் இன்னொரு தாயின் குழந்தையை கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 5 அறிவுள்ள ஜீவன்களுக்கு இருக்கும் பாசம், நேசம் கூட இந்த கொடூர தாய்க்கு இல்லையே...!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X