2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

முத்தையன்கட்டு இளைஞன் மரணம்: ஜனாதிபதிக்கு சுமந்திரன் அவசர கடிதம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு,கிழக்கு மாகாணங்களில்  இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .அத்துடன் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி  இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பதில்  பொதுச்செயலாளர்   எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அவசர கடிதம் ஒன்றை  ஞாயிற்றுக்கிழமை(10) அனுப்பிவைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை  காலை எதிரிமன்சிங்கம் கபில்ராஜ் என்பவரின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் உங்கள் கவனத்துக்கு அறிவுறுத்துகிறோம்.

2025.08.07 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தின் 63ஆவது பிரிவு முகாமுக்கு  5 ஆண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இவர்களில் கபில்ராஜ் என்பவர் காணாமல் போயுள்ளார். பின்னர் அவரது உடல் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சில இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.தடையற்ற வகையில் முழுமையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்துவது மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அடக்குமுறையான நடத்தை மற்றும் அதிகப்படியான பிரசன்னத்தையும் உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், இந்த சம்பவத்தில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றோம்.

இன்றுவரை தொடரும் இராணுவத்தினரின் கொடூர செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு ஹர்த்த்தாலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X