Editorial / 2026 மார்ச் 04 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்கால நிலைமைகளை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சவால்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம்
நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருப்பினும், உலக சந்தையில் ஏற்படக்கூடிய விலை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத் தேவைகளுக்கான கையிருப்புகளைச் சீராகப் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. எரிவாயு சேமிப்பிற்கான களஞ்சிய வசதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய குறுகிய கால மூலோபாயங்களைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து
சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தடைகளால் கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது. இலங்கையுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றும் கப்பல் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம்
நாட்டில் தற்போது போதியளவு உணவுக் கையிருப்பு உள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் இதன்போது உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், போர்ச் சூழலால் பணவீக்கம் அதிகரித்து சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
சுற்றுலாத் துறை மற்றும் விமானப் போக்குவரத்து
ஐரோப்பிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை உறுதிப்படுத்த விமானப் போக்குவரத்துத் துறையில் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், தற்போது இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
புதிய முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்
இச்சூழ்நிலையில் முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, 'தரவு மையங்கள்' (Data Centers) போன்ற நவீன தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்க விசேட சலுகைப் பொதியொன்றைத் தயாரிக்குமாறு டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய தலைமையிலான குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago