Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Janu / 2025 மே 21 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023 ஆம் ஆண்டில் 34 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் 8 ஆம் பிரிவுக்கு அமைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் சிலவற்றின் முற்பண கணக்குகள் எல்லைகளை திருத்துவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு செவ்வாய்க்கிழமை (20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த முற்கொடுப்பனவு கணக்குகளுக்கு 2024 ஆம் ஆண்டுக்கு சம்பந்தப்பட்ட எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஆண்டில் ஏற்படும் தேவைகளைப் பொறுத்து கட்டளை மூலம் ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள முற்கொடுப்பனவு கணக்குக எல்லைகளை திருத்துவதற்கு நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளதாகவும், திருத்தம் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டிய அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், இந்த திருத்த எல்லைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் பரிசோதனைகளுக்கு இலஞ்சமாக பயன்படுத்துவதற்கான முற்பணக் கணக்கு, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் புத்தக அச்சிடல், விளம்பரப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பான முற்பணக் கணக்கு, இலங்கை கடற்படையின் களஞ்சிய முற்பணக் கணக்கு (வெடிபொருட்கள்), சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தொழில்துறை மற்றும் விவசாய அலுவல்கள் முற்பணக் கணக்கு, இலங்கை சுங்கத்தின் கைது செய்யப்பட அல்லது அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான முற்பணக் கணக்கு, அரச கணக்குகள் திணைக்களத்தின் இதர முற்பணக் கணக்கு, இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத களஞ்சிய முற்பணக் கணக்கு, அரச தொழிற்சாலை திணைக்களத்தின் களஞ்சிய முற்பணக் கணக்கும் செய்யப்பட பணிகளுக்கான முற்பணக் கணக்கு மற்றும் அரசாங்க ஊழியர்களின் 'பீ' கணக்கு என்பவற்றின் திருத்தத்துக்கு குழு அனுமதி வழங்கியது.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் பரிசோதனைகளுக்கு இலஞ்சமாகப் பயன்படுத்துவதற்கான முற்பணக் கணக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த குழுவின் தலைவர், ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்குத் தேவையான ஒத்துழைப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவின் குறைவின்றி வழங்குவதாக தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை சுங்கத்தின் முற்பணக் கணக்கு தொடர்பாக குழுவில் கலந்துரையாடப்பட்ட போது, மோட்டார் வாகன இறக்குமதி தொடர்பாக அதிகாரிகளிடம் வினவப்பட்டது. இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள் தொடர்பில் அறவிடப்படும் வரி பற்றி அதிகாரிகளிடம் வினவப்பட்டது. பதிவு செய்யப்படாத மற்றும் குறுகிய தூர வாகனங்களிலிருந்து அறவிடப்படும் சேர் பெறுமதி வரியின் (VAT) வருமானம் முறையாக கிடைக்கிறதா என்றும், அந்த வரி அறவிடுதல் சமநிலையானதா என்றும் குழுவின் தலைவர் மேலும் வினவினார்.
அதற்கமைய, பதிவு செய்யப்படாத மற்றும் குறுகிய தூர வாகனங்களுக்கு (used vehicle) அறவிடப்படும் வரிகளில் வேறுபாடு இருப்பதாக அதிகாரிகள் குழுவில் அறிவித்தனர். வாகன இறக்குமதியின் மூலம் பாரியளவான வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்ப்பதால், இந்நிலையில் வாகன இறக்குமதியின் மூலம் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படுவதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டுள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் எழுமாறான மாதிரியை எடுத்து அவற்றில் இருந்து பெறப்பட்ட வரி தொடர்பாக அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு இலங்கை சங்கத்தின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, அர்கம் இல்யாஸ், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, திலின சமரகோன், சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .