2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மலையகத்தில் கறுப்புத் தீபாவளி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜ், ஆ.ரமேஷ்

தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுத்ததாக மார்தட்டிக்கொள்ளும் 110 ரூபாயானது, சம்பள அதிகரிப்பா அல்லது கட்டமொய்யா (மரண இறுதிச் சடங்கின் போது வழங்கப்படும் பணம்) எனக் கேள்வியெழுப்பியுள்ள தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கு தங்களால் மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் 150 ரூபாய் சந்தாப்பணத்தை நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.  

“மக்களை வதம் செய்த நரகாசுரன் அழிந்த தினத்தையே, தீபாவளியாக நாம் கொண்டாடுகின்றோம். அந்தவகையில், தொழிலாளர்களின் உரிமைக்கும் உழைப்புக்குமேற்ற ஊதியத்துக்கும் உலை வைத்த நரகாசுரர்களை (தொழிற்சங்கவாதிகளை), எம் மனதிலிருந்து அழித்தொழிக்கும் கறுப்புத் தீபாவளியாகவே, இந்தத் தீபாவளியைக் கொண்டாடவுள்ளோம்” என்றும் அவர்கள் கூறினர். 

கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய கூட்டொப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கரப்பத்தனை - கிரன்லீ கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள், நேற்றுப் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே, அந்த தோட்டத் தொழிலாளர்கள், மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.  

குறித்த தோட்டத்தின் கொழுந்து நிறுவை மடுவத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள் கூறியதாவது:  

“கடந்த மூன்று வருடங்களாக, 450 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை பெற்று வந்த எமக்கு, 50 ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 50 ரூபாயும், எமது தொடர் போராட்டங்களின் பின்னரே கிடைத்தது. தற்போதைய நிலையில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்துகொள்ளாத எமது தலைவர்கள் பெற்றுக்கொடுத்த இந்தச் சம்பள உயர்வானது, உழைக்கும் எமது சடலத்துக்கு எழுதி வைத்த கட்டமொய்யாகும்.  

எமது பிரதிநிதிகள் எம்மைக் காப்பார்கள் என்று கருதி, கிடைக்கும் குறைந்த வருமானத்திலும் 150 ரூபாயை, தொழிற்சங்கங்களுக்குச் சந்தாப்பணமாகச் செலுத்தி வருகின்றோம். இந்நிலையில், எங்கள் உரிமையை, தொழிற்சங்கங்கள் காப்பாற்றத் தவறிவிட்டன. எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனை தற்போது உணர்ந்துகொண்ட நாம், இதுவரை வழங்கி வந்த சந்தாப் பணத்துக்கு, சங்கு அடித்துவிட்டோம். 

இங்கு வசிக்கும் அனைத்துத் தொழிலாளர்களும், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்குமான சந்தாப் பணத்தை, இம்மாதம் முதல் வழங்க மாட்டோம். இதனை உணர்த்தும் வகையில், தோட்டத் தொழிலாளர்களால் தனித்தனியாக கையொப்பமிட்ட கடிதங்களை, தோட்ட அதிகாரிக்குக் கையளித்துள்ளோம்” என்று மேலும் கூறினர்.  

சந்தாப் பணத்தை நிறுத்துமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள், தாம் கையொப்பமிட்ட கடிதங்களை தோட்ட நிர்வாகத்திடம் இதன்போது கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .