2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை ?

Janu   / 2025 ஜூலை 31 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள பணிப்புரையை ஏற்றுக்கொள்ள முடியாதென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.  

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலையிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் தாதியர்கள், மருத்துவ மாதுகள் மற்றும் சிற்றூழியர்கள் இனிமேல் கலாச்சார ஆடை அணிந்து கடமைக்கு வரக்கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அலுவலர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

தாங்கள் கடமை ஏற்றது முதல் தற்போது ஓய்வூதியம் பெறும் வயதை அடைந்துள்ள இதுவரையான காலத்தில் எங்களது சீருடையுடன் கலாச்சார உடையும் சேர்த்து அணிந்தே சென்றே   கடமைகளை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், தற்போது கலாச்சார உடை அணிந்து கடமைக்கு வரக்கூடாது என்றும் இதை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து எமக்கு நியாயம் பெற்றுத் தாருங்கள் என்று பாதிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இனவாதம் இல்லாத ஆட்சி என்று மேடைக்கு மேடை கூறிக்கொள்ளும் இந்த அரசாங்க காலத்தில் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் இனவாத போக்கை கையில் எடுத்துள்ள அரச அதிகாரிகளுக்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது இந்த உத்தரவின் பின்னால் இந்த அரசாங்கம் தான் உள்ளதா என்ற சந்தேகம் உருவாகிறது.

குறித்த பதவிகளுக்குரிய சீருடைக்கு மேலதிகமாக முஸ்லிம் பெண் ஊழியர்கள் தமது கலாச்சார ஆடைகளை காலாகாலமாக அணிந்து வருகிறார்கள். இதனை இப்போது அகற்ற சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

இந்த உத்தரவை வாபஸ் பெறப்பட வேண்டும். இனவாதத்தை தற்போது கையில் எடுத்துள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.

அபு அலா 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .