2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் தாவினார் வசந்த?

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு மத்தியில், ஏற்கெனவே பல தடவைகள் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் வசந்த சேனாநாயக்க எம்.பி, மீண்டுமொரு முறை தனது அரசியல் ஆதரவை மாற்றியுள்ளார் என்று கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புக்கு ஆதரவு வழங்கும் அத்துரலியே ரத்தன தேரர் எம்.பியால் ஒழுங்கமைக்கப்பட்ட, “ரட்ட கொட நகன ஜாதிக சபாவ” (நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய சபை) என்ற நிகழ்வில், வசந்த சேனாநாயக்க, நேற்று (02) கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில், மஹிந்த தரப்பைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்‌ஷ, உதய கம்மன்பில ஆகியோரும் கலந்துகொண்டிருந்த நிலையில், அவர்களுடன், வசந்த சேனாநாயக்க கலந்துரையாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஐ.தே.கவைச் சேர்ந்த அவர், ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் மாற்றத்துக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர், 28ஆம் திகதி, அலரி மாளிகைக்குச் சென்று, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த அவர், அவருக்கான ஆதரவை உறுதிப்படுத்திய போதிலும், மறுநாளே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, அமைச்சர் பதவிக்கான நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, 2 வாரங்கள் வரையில் மஹிந்த தரப்புக்கு ஆதரவாக இருந்த அவர், நவம்பர் 14ஆம் திகதி, ஐ.தே.க தரப்புடன், நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டார். என்றாலும், 21ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அவர் பின்னர் கலந்துகொண்டார். மீண்டும், 26ஆம் திகதி நடைபெற்ற ஐ.தே.க கூட்டமொன்றில் அவர் கலந்துகொண்டதோடு, அதுவே அவரது இறுதி மாற்றமெனக் கருதப்பட்டது.

எனினும், நேற்றைய அவரின் செயற்பாடு, அவர் மீண்டும் ஆதரவை மாற்றிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இது தொடர்பாக அவரிடம் தகவல்களைப் பெற்று உறுதிப்படுத்துவதற்கு அவரிடம் முயன்ற போதிலும், இச்செய்தி அச்சுக்குப் போகும் வரை, அவரிடமிருந்து பதிலெதனையும் பெற முடிந்திருக்கவில்லை.

(படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .