2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீண்டும் கடிதம்

Editorial   / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள்,  (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,  09.10.2025 அன்று அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X