Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
A.Kanagaraj / 2018 ஜனவரி 11 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கடந்த ஆட்சியில் இடம்பெற்ற தவறுகள் யாவும் மறைக்கப்பட்டன. அதேபோல், தவறுகளை மறைத்து சட்டத்தின் ஆட்சியை நசுக்குவதற்கு நாம் தயாரில்லை” எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோக மோசடிகள் குறித்து, முன்னாள் நிதியமைச்சர் என்றவகையில் மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.
“அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அந்தக் கொடுக்கல் வாங்கல்கள், மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதி இல்லாமல் இடம்பெற்றுள்ளன” என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், நேற்று (10) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“திறைசேரி முறி விநியோகத்தினால் வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை.
“2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கு அரச நிதிக் குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன்.
“அக்காலத்தில் 5,147 பில்லியன் ரூபாய்க்கு பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 4,702 பில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகள் தனி நேரடிமுறைக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்காலப் பகுதியில் 90 சதவீதமான பிணைமுறிகள் தனிநேரடி முறையூடாகவே வழங்கப்பட்டன.
“அது மாத்திரமன்றி மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதி இன்றியே இவை விநியோகிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு பதில் கூறவேண்டும். நாட்டு மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
“முன்னைய ஆட்சிக் காலத்தின் மோசடிகள் மூடி மறைத்து சட்ட ஆட்சியை குழிதோண்டி புதைப்பதற்கு நாம் தயாராக இல்லை. முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு பதில் கூற வேண்டும். இது தொடர்பாக துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
“பிணைமுறி தொடர்பான வாதப்பிரதிவாதம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டது. இதுகுறித்து மேலதிக கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கு சட்டத்தரணி காமினி பிட்டிபன தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைத்து விவாதம் நடத்தினோம். அதன்பின்னர் மேலதிக விசாரணைக்காக இதன் நடவடிக்கைகள் கோப் குழுவுக்கு வழங்கினோம்.
“கோப் குழு, தனது விரிவான விசாரணையை ஆரம்பித்து அதன் அறிக்கையை 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இதற்கான விவாதமும் நடத்தப்பட்டது. இதன்போது கோப்குழுவின் அறிக்கையையும் அதனுடன் இணைந்த கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கையையும் நான் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பினேன்.
“பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் மோசடி நடந்துள்ளதா? அர்ஜுன மகேந்திரன் பொறுப்பு கூற வேண்டுமா? அப்படியாயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? என கடிதம் மூலம் சட்டமா அதிபரிடம் கோரினேன்.
“இதன்பின்னர் சட்ட மா அதிபர் கோரும் அனைத்து ஆவணங்களை வழங்குமாறு நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவித்தேன். இந்நிலையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சட்டதரணிகள் குழுவொன்று அமைக்கப்பட்டு தற்போதும் அதன் விசாரணைகள் நடந்தவண்ணமுள்ளன.
“தப்பு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனை நாம் திருத்திக்கொள்ள வேண்டும். எனினும் முன்னைய ஆட்சி காலத்தின் மோசடிகள் மூடி மறைத்து சட்டவாட்சியை குழித்தோண்டிப் புதைப்பதற்கு தயாராக இல்லை. கடன் சுமையும் நீதி நிலைநாட்டப்படாத ஊழல் மோசடிமிக்க நாட்டையே பொறுப்பேற்றோம். நாடு தற்பொழுது சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதுடன், நீதியான சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்” எனக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago