2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 325 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய 54 வாகனங்கள் மீட்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு 325 மில்லியன் ரூபாய் நட்டத்​தை ஏற்படுத்தும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 வாகனங்களை, பாணந்துறை, வலான பகுதியில் வைத்து, வலான பொலிஸின் மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.   

வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அவை மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றை அடுத்து, குறித்த அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.   

மினுவங்கொட கைத்தொழில் வலயத்திலுள்ள பகுதியொன்றிலேயே, பிரபல வாகன விற்பனை நிறுவனமொன்று, இந்த வாகனங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் இங்கு, என்ஜின் அற்ற மற்றும் சுங்க அதிகாரிகளினால் திருப்பிக்கொடுக்கப்பட்ட வாகனங்களும் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாவும் தெரியவந்துள்ளது.   

இங்கு கொண்டுவரப்படும் வாகன உதிரிப்பாகங்களைக் கொண்டு முழுமையாக்கப்படும் வாகனங்கள், உள்ளூர் சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. இதன் மூலம், குறித்த நிறுவனம், சுங்கச் சட்டத்தை மீறியுள்ளது என்றும் இதனால், அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.   

இதன்போது, 29 கார்கள், 22 ஜீப்கள், 2 வான்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்பின் போது, குறித்த நிறுவனத்தால் எந்தவொரு பத்திரத்தையும் சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.   

மேலும், இந்த மோசடி குறித்த விவரங்கள் தெரியவந்தால், 038 - 2234314 அல்லது 039- 2234315 என்ற வலான பொலிஸின் மோசடி தடுப்புப் பிரிவின் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறு, பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X