2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ரணில் முன்னுதாரணம்’

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையுடன், நான்கு தடவைகள் இந்த நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானமையால் ஏனைய அரசியல் பிரமுகர்களுக்கும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அது மாத்திரமன்றி, அங்கு அவர் மிக நாகரிகமாக நடந்துகொண்டமையையும் நாம் பாராட்ட வேண்டும்” என, கல்வி இராஜாங்க அமைச்சர்வே.இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றில் நேற்று (21) தெரிவித்தார்.

“2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

“நுவரெலியா மாவட்டத்துக்கு பல்கலைக்கழகம் ஒன்று அவசியமாகும். நாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவுக்கான வெட்டுப்புள்ளித் திட்டம் நல்லது, எனினும் சில மாவட்டங்களுக்கு சிறப்புரிமை வழங்கப்பட வேண்டும். அதாவது நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மாணவன் 1.8 வெட்டுப்புள்ளி பெறும்பட்சத்தில், ரஜரட்ட பல்கலைக்கழகமே கிடைக்கப்பெறுகிறது. அந்த மாணவனுக்கு களனி அல்லது பேராதனைப் பல்கலைக்கழகங்கள் கிடைக்கப்பெறும் வகையில் முறைமை மாற்றப்பட வேண்டும்.

“குறிப்பாக நுவெரெலியா, பொலன்னறுவை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. அவைத் தொடர்பில் விசேட கவனம் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

“வடக்கு மாகாணத்தில் பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி, விடுதிகள் அபிவிருத்தி செய்யப்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும். யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகம் ஒரு பிரிவாக இயங்கி வருகிறது. அது, ஒரு பீடமாக மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் நாம் அறிவித்துள்ளோம்.

“அது தவிர நுவரெலியா மாவட்டத்துக்கு பல்கலைக்கழகம் ஒன்று அவசியமாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக அது அமைக்கப்படுமாயின், மாணவர்களுக்குப் பயனுடையதாக அமையும்.

“வீதி அபிவிருத்தியைப் பொறுத்தவரையில், பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சிறப்பான பணிகளை முன்னெடுத்து வருகிறார். இராஜகிரிய பகுதியில் அமைக்கப்படும் பாலம் காரணமாக பத்தரமுல்லை பகுதியில் பெரும் வாகன நெரிசலைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும். அதேபோல் கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையையும் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் அமைக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன். அதற்கான ஆரம்பப் பணிகள் தற்சமயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“ஹட்டன்- கொழும்பு வீதியும் மிக மோசமான நிலையில் உள்ளது. ஆதலால் அதனையும் திருத்தியமைக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல் நுவரெலியா புரொட்டொப் பாதை குறித்து நான் இதற்கு முன்னரும் இந்த சபையில் சுட்டிக்காட்டியிருந்தேன். சுமார் 32 கிலோ மீற்றர் தூரம் உள்ள அந்தப் பாதை  விரைவில் செப்பனிடப்பட வேண்டும். இதன் காரணமாக இன்று, பேஸ்புக்கில் அமைச்சர்களையும் அரசியல் பிரமுகர்களையும் மிக மோசமாக முகநூலில் விமர்சிக்கிறார்கள். ஆதலால் அந்த விடயத்தைக் கவனத்திற் கொள்ளுமாறு நான் அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .