2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரவிராஜ் கொலை: சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத்தாக்கல்

Thipaan   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் அதிக்குற்றப்பத்திரம் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்படும் என்று பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரோஹான் அபேசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்கவிடமே அவர் மேற்கண்டவாறு, நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். 

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இன்னுமிருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவ்விருவரையும் பிணையில் விடுவிக்குமாறு அவ்விருவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிநின்றபோதே, சொலிஸிட்டர் ஜெனரல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சந்தேகநபர்களான ஹெட்டியாராச்சிகே பிரசாத் சந்தன குமார மற்றும் காமினி செனரத் ஆகிய இருவருக்குமே பிணை வழங்குமாறு கோரப்பட்டது.

நாரஹேன்பிட்டியவில் வைத்து 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் பலியானர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மேற்குறிப்பிட்ட இருவருக்கு மேலதிகமாக இன்னும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்காக, அவர்களை மேலும் மூன்று மாதங்களுக்கு தடுத்துவைக்க உத்தரவிடுமாறு சொலிஸிட்டர் ஜெனரல் கோரிநின்றார்.

முன்வைக்கப்பட்ட காரணங்களை ஆராய்ந்த நீதிபதி, பிணைகோரிக்கை தொடர்பில் இரண்டுவார காலத்துக்குள் எழுத்துமூலமான அறிக்கையை கையளிக்குமாறு உத்தரவிட்டதுடன், மேற்படி வழக்கை மே மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X