2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ராகலை தீ; ஐவரின் சடலங்களும் அடக்கம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்

ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள், இன்று (09) இரவு இடம்பெற்றன.

தோட்ட மக்கள் அணிதிரண்டு கண்ணீர் மல்க இறுதி கிரியைகளில் பங்கேற்று சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. 

தோட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், தோட்ட மக்கள் எவரும் இன்று தொழிலுக்கு செல்லவில்லை.

ராகலையில் ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவத்தில் உடல் கருகிப் பலியோனோரின் சடலங்கள் தொடர்பில் நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், உடற் கூற்று மாதிரிகளை இராசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவேண்டும் என இன்று மாலை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் போது, உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட முடியாததால் இந்த திறந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (09) இடம்பெற்றன.

இதன்போதே, நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் தற்காலிக தனி வீடு ஒன்று வியாழக்கிழமை (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்தது.

இந்த  திடீர் தீ விபத்து சம்பவத்தில்  இவ் வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57) ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (வயது 13), முதல் கணவரின் பிள்ளை) மற்றும் மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X