2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

லசந்தவின் அலைபேசியைக் கண்காணிக்குமாறு கோட்டாவே பணித்தார்

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவரின் அலைபேசியைக் கண்காணிக்குமாறு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பணித்திருப்பது, அரச புலனாய்வுச் சேவை ஆவணத்திலிருந்து தெரியவந்துள்ளது. 

லசந்த விக்கிரமதுங்க உட்பட பலரது, அலைபேசி இலக்கங்களை கண்காணிக்கும் படி, கோட்டாபய பணித்திருப்பதைக் காட்டும் ஓர் அறிக்கை, ஊடகங்களில் வெளியாகியுள்ளது.  

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில், இந்த அலைபேசி இலக்கங்களைக் கண்காணிக்க வேண்டியுள்ளது என, கோட்டாபயவின் பணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

லசந்தவின் அலைபேசி மட்டுமின்றி, அவரின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டது. லசந்த, 2008ஆம் ஆண்டு செப்டெம்பரில் கொல்லப்பட்டார். 

இதற்கு சில வாரங்களுக்கு முன்னர், அன்றிருந்த பொலிஸ்மா அதிபரின் ஊடாக, பாதுகாப்புச் செயலாளரினால் இந்தக் கட்டளை வழங்கப்பட்டது. இவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என, கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கண்காணிக்கப்பட்டவர்களில், ரணில் விக்கிரமசிங்கவும் அடங்கியிருந்தார். இந்தக் இந்தக் கண்காணிப்பு, நாட்டின் பாதுகாப்புப் பற்றியதாக அன்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நன்மைக்காகவே செய்யப்பட்டது. 

குற்றப்புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பன, அலைபேசி ஒட்டுக்கேட்கும் வசதி, ஆட்களைக் கண்காணிக்கும் ஜி.பி.எஸ் வசதி என்பவற்றைக் கொண்டிருந்தன. 

முன்னைய திரிப்போலி சந்தைக் கட்டடத்தில் இருந்து செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு பற்றிய சான்றும் கிடைத்துள்ளது. இந்தக் கட்டடப் பகுதி, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்ட உயர் அதிகாரிகளினால் பயன்படுத்தப்பட்டது.  

மோட்டார் சைக்கிள் படைப்பிரிவும் இங்கிருந்துதான் செயற்பட்டது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சந்தேகநபர்களும் இங்குதான் தடுத்துவைக்கப்பட்டனர்.  

இந்தக் களஞ்சியசாலையின் ஒரு பகுதி, மிகவும் சொகுசாகப் புனரமைக்கப்பட்டிருந்தது. கோட்டாபயவின் கம்பியூட்டர் படைப்பிரிவும் இங்கேயே இருந்தது என்றும் அறியமுடிகின்றது.  

‘லசந்தவைக் கொல்’ நடவடிக்கையில் பயன்பட்ட பலவகையான அலைபேசிகள் இங்கிருந்தே இயக்கப்பட்டன. இதை நிறுவக் கூடிய பதிவுகளும் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .