2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விஜயகலாவின் கருத்துக்கு கடும் கண்டனம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்து, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்துக்கு, அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராகியிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று,​ கிளிநொச்சியில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, “இந்தக் கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கருத்துக்கு நாம் கண்டனம் தெரிவிக்கின்றோம். நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம்” என்றார்.

அத்துடன், விஜயகலாவின் கருத்து, அவரது ​சொந்தக் கருத்து ​என்று தெரிவித்த ஹப்புஹாமி எம்.பி, ஐ.தே.கவுக்கு, இந்தக் கருத்து ஒத்துப்போகாதது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், விஜயகலாவின் கருத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வொன்றை, அரசியல் மேடையாக்கி, அதன்போது இவ்வாறான கருத்தை முன்வைத்தமை தொடர்பில் கரும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, விஜயகலாவின் கருத்து, குழந்தைத்தனமானது என்றுத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அரசியல் ரீதியில் பிரசித்தியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, அவர் இவ்வாறான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார் என்று, குறிப்பிட்டார்.

“விஜயகலாவின் கருத்து, கணக்கிலெடுக்கப்பட வேண்டிய கருத்து அல்ல. அதுவொரு முட்டாள்தனமான கருத்தாகும்” என்று, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .