2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வங்கியில் 14 வருட அனுபவம்;பிச்சை எடுக்கும் இளைஞர்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூரில் 14 வருடங்கள் வங்கித் துறையில் அனுபவம் கொண்ட ஒரு நபர், இப்போது வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வேறு வழியில்லாமல் அவர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பான போட்டோ ரெட்டிட் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. யார் அந்த நபர்.. அவருக்கு ஏன் இதுபோல நடந்தது.. இதன் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் நியாயமானதாக இருக்காது. நாம் எதிர்பார்க்காத நேரங்களில் பல மோசமான சம்பவங்கள் நடக்கும். இதனால் நல்ல நிலையில் இருப்போர் கூட திடீரென அனைத்தையும் இழந்துவிடுவார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது பெங்களூரில் நடந்துள்ளது.

14 வருட அனுபவம்

சுமார் 14 ஆண்டுகள் அனுபவம் இருந்தும் கூட வேலையில்லாமல் பெங்களூர் இளைஞர் ஒருவர் வீதிக்கு வந்துள்ளார். ரெட்டிட் தளத்தில் இது தொடர்பான போட்டோ பகிரப்பட்டுள்ளது. பெங்களூரில் பரபரப்பான ஒரு இடத்தில் உள்ள சிக்னல் ஒன்றில் நடைபாதையில் அமர்ந்திருக்கும் ஒருவரின் இரண்டு படங்கள் அந்த நெட்டிசன் தனது ரெட்டிட் தளத்தில் வெளியிட்டிருந்தார்.

கையில் ஒரு பையுடன் அமர்ந்திருந்த அந்த நபர், உதவி கோரி ஒரு கடிதத்தை வைத்திருந்தார். அந்தக் கடிதத்தில், தனக்கு 14 வருட வங்கி அனுபவம் இருப்பதாகவும் ஆனாலும் இப்போது வேலையில்லாமலும் வீடு இல்லாமல் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், "எனக்கு வேலை இல்லை, வீடு இல்லை, தயவு செய்து உதவுங்கள். எனக்கு வங்கித் துறையில் 14 வருடப் பணி அனுபவம் உள்ளது" என்று எழுதப்பட்டிருந்தது.

யாசகம் கேட்கிறார்

பக்கத்திலேயே QR குறியீடு உடன் ஒரு சிறிய காகிதம் இருப்பதையும் பார்க்க முடிந்தது. டிஜிட்டல் முறையில் நன்கொடை பெற அவரை இதை வைத்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அந்த ரெட்டிட் யூசர் மேலும், "பெங்களூரின் முக்கிய சிக்னல் ஒன்றில் இந்த மனிதரைச் சந்தித்தேன். இவரைப் பார்ப்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது. அதேநேரம் இது நமது சமூகத்தின் தோல்வியா அல்லது தனிப்பட்ட நபரின் முடிவால் ஏற்பட்ட தோல்வியா என்பதில் கேள்வி இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. ரெடிட் யூசர்களிடையே இது கலவையான எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அனுதாபம் தெரிவித்தனர். அதேநேரம் மற்றவர்கள் அந்த மனிதரின் இந்த மோசமான நிலைக்கு அமைப்பின் தோல்வி காரணமா.. இல்லை அவர் எடுத்த தனிப்பட்ட முடிவுகள் காரணமா என்றும் விவாதித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "நீங்கள் ஏற்க மறுத்தாலும் நமது நாட்டின் கடுமையான உண்மை இதுதான்.. கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்குக் கூட 1% பேருக்குக் கூட வேலை கிடைப்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

வேலை வாய்ப்பு இருக்கு

மற்றொரு நபர், "அவருக்கு உடல்ரீதியாகப் பாதிப்பு இருக்கிறதா? அப்படி உடலில் பிரச்சினை என்றால் என்னுடைய அனுதாபங்கள். இல்லையென்றால், ஒரு இளம் வயது நபர் இப்படிப் பிச்சை எடுப்பதற்கு எந்தவிதச் சாக்குப்போக்கும் இல்லை.

பெங்களூர் போன்ற நகரத்தில், வேலை செய்யத் தயாராக இருந்தால் ஏராளமான வேலைகள் உள்ளன. நல்ல சம்பளம் தரும் வேலைகள் இல்லை என்றாலும், வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் பெங்களூரில் கிடைக்கும். ஆம், வாழ்க்கை கடினமானது.. ஆனால் நீங்கள் தான் உங்களுக்குப் போராட வேண்டும். யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை" என்று குறிப்பிட்டார்.

இன்னொரு நபர் வேறுபட்ட கருத்தை முன்வைத்தார். அந்த நபர், "பெரும்பாலான மக்கள் அவருக்கு உடலில் பிரச்சினை இல்லை என்றால் குறைந்தபட்சம் டெலிவரி அல்லது ஓட்டுநர் வேலைகளைச் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நீண்ட காலமாக வேலையின்றி இருந்தால், மனரீதியாகப் பாதிக்கப்படுவோம். அதுவும் ஒரு தடையை உருவாக்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X