2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

’வடக்கு – கிழக்கை பூர்வீக தாயகமாக அங்கிகரிக்கவும்’

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

ஈழத் தமிழர்களின் பூர்வீக தாயகமாக வடக்கு – கிழக்கை அங்கிகரிக்க வேண்டும் என முள்ளிவாய்க்காலில் நேற்று (18) வெளியிடப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால்  பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின்  13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வெளிச்சியுடன் நேற்று நடைபெற்றது. 

அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும்   வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் இங்கு வெளியிடப்பட்ட  முள்ளிவாய்க்கால்  பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“மே 18 எங்கள் தேசத்தின் மீது தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் நிகழ்த்தி வருகின்ற இனவழிப்பின் பாரதூரத் தன்மையையும், அச்ச மூட்டும் அதன் பரிமாணத்தையும், அவற்றால் எங்களுக்கு ஏற்பட்ட தாங்கொணா இழப்புகளையும் நினைவு கூர்வதற்கான ஒரு நாள் மட்டுமல்ல.

“எத்தனை துயரங்கள் வந்தாலும் அழுத்தங்கள் தரப்பட்டாலும் நாங்கள் தோற்றுப் போக மாட்டோம். முள்ளிவாய்க்கால் எமது எழுச்சியின் முடிவல்ல எனப் பிரகடனம் செய்கின்ற ஒரு நாளுமாகும்.

“இந்த நாளில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே வீழ்ந்திட்ட பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்து விதையாகிப்போன மற்றும் தங்கள் எதிர்காலத்தை -வாழ்க்கையை எங்களுக்காக தியாகம் செய்து இன்று துன்பத்தில் வாடுகின்ற எங்கள் செல்வங்களையும் நினைந்து நாங்கள் கண்ணீர் சிந்துகின்றோம்.

“முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்தும் அதனை ஒட்டிய நாட்களிலும் தாயகமெங்கும் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட எங்கள் உறவுகளையும் நாங்கள் இந்த நேரத்தில் நினைவு கூருகின்றோம்.
“இனவழிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியபோது, உரிமைகளைக் கோரிய போது, சிங்கள அரசு வன்முறையை கையிலெடுத்தது. அரசின் அடக்குமுறைகள் அழித்தொழிப்புகளுக்குப் பாதுகாப்பாகத் தமிழர்களின் எதிர்ப்பு வடிவங்களும் காலத்துக்குக் காலம் பரிமாண வளர்ச்சியடைந்தது. 

“அத்தகைய வளர்ச்சிக்கு ஏற்ப அரசின் வன்முறைக் கொடூரங்களும் மிகையாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக 2009இல் முள்ளிவாய்க்காலில் ஒரு பாரிய இனப்படுகொலை தமிழ் மக்கள் மீது ராஜபக்‌ஷ தலைமை தாங்கிய அரசால் நடத்தி முடிக்கப்பட்டது.

“அரசின் அந்த வெற்றி பௌத்த-சிங்கள மேலாதிக்க வெற்றியாக மாற்றம் செய்யப்பட்டது. 70 ஆண்டு கால பேரினவாத அரசியலின் விளைவை தற்போது பொருளாதாரச் சீர்குலைவாக நாடு அனுபவிக்கின்றது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவின் தாக்கங்கள் அனைத்து வேறுபாடு இன்றி பாதித்துள்ளது. 

“ஊழலுக்கும் அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் பொறுப்புக் கூற அழைப்பு விடுக்கும் போராட்டக்காரர்களால், இன்றுவரை தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு மட்டுமல்ல இறுதி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் செய்யப்பட்ட இனவழிப்புக்காகத் தன்னும் பொறுப்புக் கூற வேண்டும் என இன்றுவரை கூற முடியவில்லை.
“இந் நாளில் எங்களின் ஆத்மார்த்த கோரிக்கைகளை மீண்டும் ஒரு தடைவ வலியுறுத்த விரும்புகின்றோம்.

1. நினைவுகூர்தலுக்கான உரிமையும் ஓர் அடிப்படை உரிமை. அது ஈழத்தமிழர்களின் பண்பாட்டு உரிமையும் கூட. ஈழத்தமிழர்களின் அந்த உரிமையை அரசு ஒரு போதும் தடுக்க முடியாது.

2. தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மீள வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் வடக்கு-கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழர் தாயகம் உட்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

3. ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகமாக வடக்கு – கிழக்கை அங்கிகரித்தல் வேண்டும்.

4. பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கான ஒரு பொறிமுறையே ஒற்றையாட்சி முறைமை என்பதை ஏற்றுக் கொண்டு, ஒற்றையாட்சியை அகற்றித் தமிழனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல் வேண்டும்.

5. தமிழர்கள் ஒரு தேசமாக தங்களை அடையாளப்படுத்தத் தேவையான அனைத்து இயல்புகளையும் பண்புகளையும் கொண்டவர்கள் என்பதையும் அதன் வழி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் ஒரு போதும் பராதீனப்படுத்த இயலாத இறைமையும் உள்ளது என்பதும் ஏற்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .