Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Nirshan Ramanujam / 2017 நவம்பர் 30 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“காலநிலை பிரச்சினை காரணமாக உரிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. விளைச்சலைக் கூட தனியார் நிறுவனங்கள் விலைகொடுத்து வாங்கிவிட்டன” என்று, கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (29) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கடும் வாக்கு வாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2018ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் கைத்தொழில் வணிக அமைச்சு, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு ஆகியவை மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள் நிர்மலநாதன் முன்னதாக உரையாற்றினார்.
அவர், தனதுரையில்,
“யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. வெறுமனே, நல்லாட்சி, நல்லிணக்கம், அபிவிருத்தி எனப் பேசப்படுகின்ற போதிலும் வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தொழில்வாய்ப்புகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை. கைத்தொழிற்சாலைகள் உருவாக்கப்படவும் இல்லை. வடக்குக்கு மாத்திரம் கைத்தொழிற்சாலைகள் ஏன் உருவாக்கப்படவில்லை? வடக்கில் தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு நிதியொதுக்கீடு செய்யப்படாமை குறித்து மனம் வருந்துகிறேன்” என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், “காங்கேசன்துறையில் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், இதுவரை அதற்கான ஆதரவு வழங்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதமர் தலைமையில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. வட மாகாண சபை, எமக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்றார்.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: ஒரு பிரதேசத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முன்னர், அப்பகுதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அறியத்தர வேண்டும்.
ரிஷாட் பதியுதீன்: எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் எனது அமைச்சு அதிகாரிகளை அழைத்து வருகிறேன். நீங்களும் வாருங்கள். நாம் பேசி தீர்மானம் ஒன்றுக்கு வருவோம்;.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: எத்தனை மணிக்கு?
ரிஷாட் பதியுதீன்: 10 மணிக்கு
சார்ள்ஸ் நிர்மலநாதன்: சாதாரண மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை இருக்கிறது. அரசாங்கத்தின் மீது மிக நம்பிக்கையுடன், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்ற நோக்கில் வாக்களித்தார்கள். ஆனால் அரிசி, தேங்காய், வெங்காயம் ஆகியவை நிர்ணயித்த விலையில் விற்கப்படுவதில்லை.
இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
சதொச நிறுவனத்தில் நிர்ணய விலையில் அரசியை விற்பனை செய்ய முடியாதுள்ளது.
ரிஷாட் பதியுதீன்: நீங்கள் சதொச நிறுவனத்துக்குச் சென்றீர்களா?
சார்ள்ஸ் நிர்மலநாதன்: ஆமாம்.
ரிஷாட் பதியுதீன்: எங்கே?
சார்ள்ஸ் நிர்மலநாதன்: மன்னார்
ரிஷாட் பதியுதீன்: சதொச நிறுவனத்தில் தான் மிகவும் குறைந்த விலையில் அரசி விற்பனை செய்யப்படுகிறது. சிவப்புப் பச்சை அரிசி 62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய அரசிகள் 65,74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சதொச நிறுவனங்களின் எண்ணிக்கை 500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: அப்படியானால் ஏன் அரசிக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது?
ரிஷாட் பதியுதீன்: நாட்டு மக்களில் 6 முதல் 7 சதவீதமானோரே சதொசவில் கொள்வனவு செய்கின்றனர். நாட்டில் நிலவிய கடும் வரட்சி காரணமாக அரசி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கு முதல் இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்படவில்லை. நாட்டில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சதொச நிறுவனத்தை உருவாக்க முடியாது. ஆதலால், இரு பிரதேச செயலகங்களுக்கு ஒன்று என்ற வகையில் நாம் முகவர் நிலையங்களை அமைக்கத் தீர்மானித்திருக்கிறோம். அதனூடாக குறைவான விலையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: நாட்டில் அரசித் தட்டுப்பாட்டை நீக்க முடியவில்லையே?
ரிஷாட் பதியுதீன்: காலநிலை பிரச்சினை காரணமாக உரிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. விளைச்சலைக் கூட தனியார் நிறுவனங்கள் விலைகொடுத்து வாங்கிவிட்டன.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: அப்படியானால் உங்களால் இந்த விடயத்தைச் சரியாக நிர்வகிக்க முடியவில்லையா?
ரிஷாட் பதியுதீன்: அரசாங்க நிறுவனத்தைத் தவறாக விமர்சிக்காதீர்கள். நாம் மிகவும் தரமான பொருட்களை விநியோகிக்கிறோம். நான் அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் 300 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்ட நிறுவனமாக இருந்தது.
ஆனால், முதல் வருடம் 1.5 பில்லியன் ரூபாயும் இரண்டாவது வருடம் 3 பில்லியன் ரூபாயும் வருமானம் ஈட்டும் நிறுவனமாக நான் மாற்றியமைத்திருக்கின்றேன்;.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: அமைச்சுக்குக் கீழ் இயங்கும் எஸ்.டி.சி நிறுவனத்தின் ஊடாக, அரபு நாட்டுத் தூதரகங்களின் பெயரில் வெளிநாட்டு மதுபானம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது குறித்து அமைச்சருக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் என்னிடம் அது தொடர்பான தகவல்கள் உண்டு. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரிஷாட் பதியுதீன்: அவ்வாறு இடம்பெற்றதாகத் தெரியவில்லை. உரிய வகையில் முறைப்பாடு செய்தால் விசாரணை செய்ய நாம் தயார்.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: அரசி இறக்குமதியில் பல பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கோப் குழு அறிவித்துள்ளது. ஆனால், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என நான் கேட்கிறேன்.
ரிஷாட் பதியுதீன்: கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் அனைத்து விதமான விசாரணைகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். அது, நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் இடம்பெற்ற மோசடியாகும்.
சார்ள்ஸ் நிர்மலநாதன்: நடவடிக்கை எடுக்குமாறு கோரி, கோப் குழு அறிவித்துள்ள போதும் நீங்கள் நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்துவது ஏன்? அவ்வாறானால் நீங்கள் சரியான முறையில் நிர்வாகத்தை வழிநடத்தவில்லை.
ரிஷாட் பதியுதீன்: அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை. அனைத்து விசாரணைகளுக்கும் நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
30 minute ago
1 hours ago