2026 மே 09, சனிக்கிழமை

dd

’வீட்டுத் தனிமைப்படுத்தல் இன்னும் முடிவாகவில்லை’

Niroshini   / 2021 மே 18 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களை, அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சையளிப்பது தொடர்பில், இன்னும் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று, சுகாதாரச் சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை, அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சையளிப்பது தொடர்பான யோசனை எவ்வாறு முன்வைக்கப்பட்டதென, இராணுவத் தளபதியும் கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, நேற்றைய தினம் (17) விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், “கொரோனா ஒழிப்புக்கான தேசிய செயலணியின் கூட்டமொன்றின் போது, விசேட வைத்திய நிபுணர்கள் சிலரால், ஜனாதிபதியிடம் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

“இதன்போது, இந்த யோசனை தொடர்பான திட்டங்களை வகுக்குமாறு, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இதற்கமைய, இவ்வார இறுதியில், அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படும்.

“இந்த வேலைத்திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகும் அனைவரும், அவரவர் வீடுகளிலேயே தங்கவைக்கப்படுவார்கள் என்று அர்த்தப்படவில்லை. மாறாக, தொற்றாளர்கள் மூன்று பகுதி பகுதிகளாகப் பிரித்தறியப்படுவர்.

“அவர்களில், நோய்த் தாக்கம் தீவிரமான உள்ளவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர். நோய்த் தொற்று தீவிரமடையாத நிலையில் காணப்படுவோர், கொரோனா சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர். மூன்றாவது தரப்பான கொரொனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்களையே, மருத்துவ ஆலோசனைகளின் பிரகாரம் அவரவர் வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவார்கள்.

“இந்த மூன்று வகையினரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, மருத்துவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீடுகளில் தனிமைப்படுத்தலை நிறைவேற்ற முடியாதவர்கள், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்” என்று, இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .