2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீதி விபத்துகளால் 3 வருடங்களில் 8,273 பேர் பலி

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்  

“2014 முதல் 2016 வரையான மூன்று வருட காலப்பகுதியில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 272 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், 8 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர்” என அரசாங்கம் அறிவித்துள்ளது.  

நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரிடம், ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இந்த மூன்றுவருடங்களில் இடம்பெற்ற விபத்துகள், அவற்றால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.  

அக்கேள்விகளுக்கு, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக பதிலளிக்கும் போதே, மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.   

“2014ஆம் ஆண்டு, 35 ஆயிரத்து 966 விபத்துகள் இடம்பெற்றன. அதில், 2 ஆயிரத்து 440 பேர் பலியாகினர். 2015ஆம் ஆண்டு 38 ஆயிரத்து 107 விபத்துகள் இடம்பெற்றன. அதில், 2 ஆயிரத்து 816 பேர் பலியாகினர். 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற 39 ஆயிரத்து 199 விபத்துகளில் , 3ஆயிரத்து 17 பேர் பலியாகியுள்ளனர்” என்றார்.  

குறுக்கிட்ட உதய கம்மன்பில, “விபத்துகளுக்கான காரணம் என்னவென்பதை அரசாங்கம் உரிய முறையில் கண்டறிந்திருக்கின்றதா?” எனக் கேள்வி எழுப்பினார்.  

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, 1950ஆம் ஆண்டுகளில் நமது நாட்டில் சுமார் 6 ஆயிரம் வாகனங்களே இருந்தன. தற்போது 6 மில்லியன் வாகனங்கள் இருக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் வீதி அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. வீதி அபிவிருத்தியானது ஒரு குறிப்பிட்ட அளவில் மாத்திரமே அபிவிருத்தியைப் பெற்றுள்ளது. அத்துடன், முச்சக்கர வண்டி சாரதிகளின் கவனமின்மையும் விபத்துக்குக் காரணமாக இருக்கின்றது” என்றார்.  

“2016ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் 18 சதவீதமான விபத்துகள் முச்சக்கர வண்டிகளுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.  

மீண்டும் குறுக்கிட்ட உதய கம்மன்பில, “பொலிஸாரின் அசமந்தப்போக்கு மற்றும் பொலிஸார் மீது மக்களுக்குப் பயமின்மை ஆகியன காரணமாகவும் விபத்துகள் அதிகரிக்கின்றன. வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துதல் என்பன இதன் காரணமாகவே இடம்பெறுகின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என வினவினார்.  

அக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, “அதற்குப் பொறுப்பான அமைச்சரிடம் தான், நீங்கள் இந்தக் கேள்வியை முன்வைக்க வேண்டும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .