2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெறமுடியும்’

Niroshini   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பில் சிலர் மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், “எமது நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் நீதிபதிகளாக கடமையாற்றுகின்றனர். நாம் எதிர்மறையாகச் சிந்திக்கின்றபோது, நடுநிலைக் கருத்துகளைப் பெற வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.

“ஒரு விடயத்தில் என்ன நன்மை உள்ளது என்பதன் அடிப்படையில் ஆராய்ந்தே நாம் செயற்பட வேண்டும். இதற்கமையவே, வெளிநாட்டு நீதிபதி விடயத்திலும் செயற்பட வேண்டும். எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள தோற்றம் பெற்று முடிந்த பலப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற நிலையியற் கட்டளைச் சட்டம், ஒழுக்கக்கோவை மீதான விவாதத்தின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கத்தில் தற்போது நிலையற்ற நிலை காணப்படுகின்ற இத்தருணத்தில், நிலையான சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

“நிலையற்ற தன்மையால் தான் நெகிழ்வுத் தன்மை காணப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில், நிலையியற் கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றக் கூடிய சிறந்த சந்தர்ப்பமாக இதை நான் கருதுகின்றேன்.

“எவ்வாறானதொரு அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பது கூட தெரியாமல் உள்ளது. பழைய நிலையியற் கட்டளைச் சட்டத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிரித்தானிய நாடாளுமன்றக் கலாசாரத்தையே நாம் பின்பற்றி வருகின்றோம். இவ்வாறானதொரு நிலைமையில், நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்து மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். நடத்தைக் கோவை கூட மாற்றம் பெற்றுள்ளன.

“மேலும், உறுப்பினர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில், நடத்தைக் கோவை அமைய வேண்டும். நிலையியற் கட்டளைச் சட்டம் மிகச் சிறந்தது. இதை முன்னிறுத்தி நாடாளுமன்ற வழிநடத்தப்படும் என நம்புகிறேன்” என்று சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X