2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வேலைக்கு செல்லுமாறு மனைவியை கணவர் கட்டாயப்படுத்த முடியாது : பரபரப்பு தீர்ப்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று புதுடெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்த அரவிந்த் சிங், ரஜினி தம்பதிக்கு கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில், தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதன் காரணமாக மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் மாதந்தோறும் ரூ.25,000 வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வலியுறுத்தி, புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் சிங் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனது மனைவி ரஜினி பி.எஸ்சி பட்டதாரி என்பதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியும். எனவே, ஜீவனாம்சத்தை ரூ.15,000- ஆக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,

மனைவி ஒரு பட்டதாரி என்பதால், அவரை வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும், திருமணத்திற்கு முன்னும், திருமணத்திற்கு பிறகும் ரஜினி வேலைக்கு செல்லாத நிலையில், அவர் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக வேலைக்குச் செல்ல மறுப்பதாக முன்கூட்டியே அனுமானிக்க முடியாதும் என்று கூறினர்.

பின்னர் அரவிந்த் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜீவனாம்சத்தை உயர்த்தி தர வேண்டுமென ரஜினி முன்வைத்த கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.

அதேநேரம் மனைவிக்கு ஜீவனாம்ச பணம் தர தாமதமானால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் என்ற வகையில் அபராதமாக தர வேண்டும் என்ற குடும்ப நல நீதிமன்ற உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X