2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ.சு.காவை சந்திரிகா அவமதித்துள்ளார்: மஹிந்த

Kogilavani   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துத் தொடர்பில் கவலை தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, தி இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி குறித்து மேலும் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ,

'தனது அரசியல் கட்சி தோல்வியடைந்தமை குறித்துப் பெருமையாகப் பேசும் எந்தவொரு அரசியல்வாதியையும் உலகில் காணமுடியாது.

ஜனாதிபதித் தேர்தலின்போது, எனக்கு எதிராக ஒருவரைப் போட்டியிட வைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னிலையாளர்களில் ஒருவரைத் தேடிய போது, அவர்களில் ஊழல் அல்லாத, கொலையுடன் தொடர்புபடாத ஒருவரைக் கண்டறிவதற்கு சிரமமாக இருந்ததாக சந்திரிகா கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் இணை போஷகர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் பதவியை வகிக்கும் இவர், தனது கட்சியினரைக் கொலைகாரர்கள், காடையர்கள் என வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கூறும்போது அது, எமது கட்சி மீதான மிக மோசமான பிரதிபலிப்பாக அமையும்' என்றும் கூறியுள்ளார். 'சந்திரிகா குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரது அரசாங்கத்திலும் இருந்தவர்கள். எனவே, அவரது கூற்றுப்படி அவர், கொலைகாரர்கள், காடையர்களைக் கொண்ட கட்சிக்குத் தலைவராக இருந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

இங்குள்ள, முரண் நிலை என்னவெனில் இவர், குறிப்பிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மீது எந்த குற்றமும் நிருப்பிக்கப்படவில்லை. ஆனால், முறையற்ற காணி கையாளுதல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் சந்திரிகா குற்றம் காணப்பட்டவர்.

இவ்வாறானவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தொடர்பில் உலகெல்லாம் கூறித்திரிய அருகதையுள்ளதா என மக்கள் தீர்மானிப்பர்' என்று மேலும் கூறினார். இதேவேளை, தனிப்பட்ட கோபத்தை காட்ட அவர், தான் கட்சியின் முன்னாள் தலைவர், இணை போஷகர், மத்திய குழு உறுப்பினர் என்ற விடயங்களை சிந்திக்காது பேச வேண்டாம் எனவும் சு.க.வின் உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் உலகெங்கும் பேசித்திரிய வேண்டாமெனவும்  சந்திரிகாவிடம் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .