2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

’ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகளுக்கு மஹிந்த அரசாங்கம் ஆதரவளித்தது’

J.A. George   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கில் குடியேறிய 44 குடும்பங்கள் விவசாயம் செய்த நிலங்களையே, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து ஹிஸ்புல்லாஹ் பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகம் அமைத்துள்ளார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில், நேற்று(07) உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், பெட்டிகலோ கெம்பஸ் என்ற இந்த நிறுவனம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பலகலைக்கழக கல்லூரியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், அப்போதைய உயர்கல்வி அமைச்சரான எஸ்.பி திசாநாயக்கவால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.  

இதனை புனானைக்கு கொண்டுச் செல்லாமல் மட்டக்களப்பின் மத்திய பகுதியில் நிறுவ வேண்டும் என்று தாங்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக நிதி பெற்றுக்கொள்ளப்பட்டு இந்தக் கல்லூரி உருவாக்கப்படும் என்று கூறப்பட்டதாகத் தெரிவித்த அவர்,  ஈரா பவுன்டேசன் என,  ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர், மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி என்று இது பதிவுசெய்யப்பட்டது. இவ்வாறான தனியார் கல்லூரிக்கு, கல்வி அமைச்சு உதவி செய்ய முடியாது. எனினும், மஹிந்த அரசாங்கம் மற்றும் அப்போதைய கல்வி அமைச்சு ஹிஸ்புல்லாவின் செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

1954 ,1974ஆம் ஆண்டுகளில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியேறியோரின் காணிகளையே, ஹிஸ்புல்லா பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பெற்றுக்கொண்ட விதமும் தவறானது. வேறு ஒரு திட்டத்துக்கு என்று பெற்றுக்கொண்டு, இதற்காக பயன்படுத்தியுள்ளார் என்றார்.

நிலத்தை பெற்றுக்கொள்வதற்கு சட்ட முறைகள் பின்பற்றப்படவில்லை. தொண்டு நிறுவனம் என்று ஆரம்பித்து அதனை கல்லூரியாக மாற்றி பின்னர் பல்கலைக்கழகம் என்று மாற்ற,  பல்வேறு பிழையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டிலிருந்து இவ்வாறான பாரிய நிதியை, தமிழர் ஒருவர் பெற்றிருந்தால், விடுதலைப் புலிகளின் பணம் என்று கூறி கைதுசெய்திருப்பார்கள்.  ஆனால்,
3.6 பில்லியன் ரூபாய் பிழையான முறையில் ஹிஸ்புல்லாஹம் பெற்றுள்ளார். இதனை மஹிந்த அரசாங்கம் மறைத்துள்ளது. தற்போதைய அரசாங்கமும் மறைக்க போகின்றதா? அத்துடன், இந்த நிதி தொடர்பில் ஹிஸ்புல்லாஹ், அவரது மகன் மாறுப்பட்ட கருத்தை வெளியிடுகின்றனர் என்றார்.

மூவின மக்கள் வாழும் குறித்த பகுதியில்,  ஒரு மதம் சார்ந்த அடையாளத்துடன் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி ஈச்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வதற்கு இது சவூதி அரேபியாவா?  எனக் கேள்வி எழுப்பிய அவர், பெட்டிகலோ கெம்பஸை தன்னிடமிருந்து யாராலும் பறிக்க முடியாதென்று  ஹிஸ்புல்லா தைரியமாக தற்போது கூறி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான விடயத்துக்கு  இந்த அரசாங்கம் துணை போக கூடாது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு 8 ஏக்கருக்கு அதிகமான காணி அபகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அரச காணியை, சாதாரண பொதுமகன் அபகரித்தால் காணி சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, இதனை அரசுடைமையாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .