2025 மே 08, வியாழக்கிழமை

கந்தளாய் பஸ் விபத்தில் சிறுவன் பலி; 28பேர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

கந்தளாய், 87ஆவது சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் 15 வயதான சிறுவனொருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கந்தளாய் நோக்கிச் சென்ற பஸ் ஒன்று 87ஆவது சந்தியில் வைத்து பாதையை விட்டு விலகி வீதியோரமாக நின்றுகொண்டிருந்த இரு சிறுவர்கள் மீது மோதியுள்ளதுடன் அருகிலிருந்த சோதனைச் சாவடியினையும் சேதப்படுத்தியுள்ளது.

இன்று காலை 7.40 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல ஆயத்தமாக பஸ்ஸிற்காகக் காத்திருந்த மேற்படி இரு சிறுவர்களில் ஒருவர் குறித்த விபத்தில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தில் ஜீ.கே.கே.தசுன் (வயது 15) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். மேற்படி சிறுவனின் சகோதரியான 17 வயதுடைய செவ்வந்தி என்ற சிறுமி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ் சோதனைச்சாவடியில் மோதுண்டதால் அதில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் மேற்படி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த 25 பெண்களும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துச் சம்பவத்தை அடுத்து கோபமடைந்த பிரதேசவாசிகள் விபத்துக்குள்ளான பஸ்ஸைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பிரதேசவாசிகளைக் கட்டுப்படுத்தியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X