2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'அநியாயங்களுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

'யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொள்ளப்பட்ட செய்தி, தமிழ் மக்கள் அனைவரையும் கலவரப்படுத்தியுள்ளது. இந்த அநியாயத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது' என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், இன்று செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம் பெறுவது, அவர்களுடைய சுயாதீனமான கல்வி நடவடிக்கைகளைப் பாதிப்பதுடன் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.

கொடூர யுத்தத்தின் போதும் இடம்பெயர்வுகளின் போதும் பாதிப்புக்குள்ளாகி இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி தற்போது மீள ஆரம்பித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மீண்டுமோர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் சமூக அமைதி, புரிந்துணர்வு, இணக்கப்பாடு நிலவ வேண்டுமென விரும்புகின்ற மக்கள் மத்தியில், இவ்வாறான அத்துமீறிய வன்முறைச் சம்பவங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் கண்காணிக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறு நடந்து கொண்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எதிர்காலக் கனவுகளைச் சுமந்து கொண்டு உயர்கல்வி கற்க வந்த மாணவர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன.

நீதியான விசாரனை உடனடியாக நடாத்தி உண்மைகள் வெளியிட வேண்டும். இம்மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் இனி மேல் நடைபெறாமல் இருக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு எமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .