2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் செயலுக்கு உடந்தையாக விரும்பவில்லை'

Suganthini Ratnam   / 2016 மே 04 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,பைஷல் இஸ்மாயில்

ஏழை மாணவர்களின் கல்வியில் அரசியல் தலையீடு செய்து அம்மாணவர்களின் கல்வியை பாதிக்கச் செய்யும் பாவச்செயலுக்கு ஆளுநர் என்ற வகையில் நான் உடந்தையாக  இருக்க விரும்பவில்லை. அதில் என்னையும் உடந்தையாக்கி விடாதீர்கள். இவ்வாறான பிரச்சினைகளை தடுக்க எமது அதிகாரத்தை பயன்படுத்தி ஏழை மாணவர்களின் கல்வியை நாம்  முன்னேற்ற முயற்சிக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள  உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள மாகாண சபை செயலகத்துக்கு வருகை தந்த ஆளுநருக்கு சபை முன்றலில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், ' கிழக்க மாகாணத்தில் ஏழை மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையில் சிலர் செயற்படுகிறார்கள். அவர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக செயற்படுகின்றார்கள்.
சில ஆசிரியர்கள் தமது செல்வாக்கை பிரயோகித்து அதிகாரிகளூடாக  அமைச்சர்களை தொடர்பு கொண்டு நகரப் பகுதிகளுக்கு இடமாற்றங்களை பெற்று செல்கின்றனர். அவ்வாறு செல்லும் இவர்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள நகரப் பிரதேசங்களுக்கே மாற்றம் கோருகின்றனர். அங்குள்ள கிராமப்புறங்களுக்குச் செல்வதில்லை. இவர்கள் இவ்வாறு முறைகேடாக இடமாற்றம் பெற்றுச்செல்லும்போது கிழக்கு மாகாணத்தில் இன்னுமொரு மாவட்டமான திருகோணமலை மாவட்ட மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் முஸ்லிம் மாணவர்களின் கல்வியே பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இங்கு சட்டத்தை மீறி செயற்பட முனையும் அதிகாரிகளையும்  காண்கின்றோம். அவர்களின் நடவடிக்கை காரணமாக நீதிக்குப் புறம்பான இடமாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கையால் ஏழை மாணவர்களின் கல்விக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
இடமாற்றம் கேட்கும்போது மட்டக்களப்பு, அம்பாறையின் நகர்ப் புறங்களுக்கே கேட்கின்றனர். அங்கும் கூட கிராமப் புறங்களுக்கு கேட்பதில்லை. எனது அலுவலகங்களுக்கு வரும் பிரச்சினைகளில் 75 சதவீதமானவை கல்வி சார்ந்தவையாகும். அதனையும் தவறாக வழிநடாத்தி தங்களுக்கு அதிகாரமில்லை எனக் கூறி  சிலர் அனுப்பி வைக்கின்றனர். அம்மக்களை நான் சரியாக விசாரித்து  விளங்குகின்றபோது  அனுப்பியவர்களே  பிழையாளிகளாக மாற்றப்படும் நிலைமையையும் நான் காண்கின்றேன்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும்.  அவர்களை இன்னுமொரு பயங்கரவாத யுகத்திற்கு வழிகாட்டக்கூடாது' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .