2025 மே 19, திங்கட்கிழமை

'கைகளைக்கட்டி முட்டுக்காலில் வைத்து கூட்டிச் சென்றனர்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

'எனது கண்முன்னே, கைகளைக்கட்டி முட்டுக்காலில் வைத்து பின்னர் கூட்டிச் சென்றனர். இவ்வாறே, எனது மூன்று ஆண் பிள்ளைகளையும் கைது செய்தார்கள். இன்றுவரை ஒருவரைக்கூட நான் காணவில்லை. எனக்கு எனது பிள்ளைகள் தான் வேண்டும்' என, நிலாவெளி பெரிய குளத்தைச் சேர்ந்த சதானந்தராசா பரமேஸ்வரி தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பணிமனையில், புதன்கிழமை (24) மாலை நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்தறியும் செயலணியின் அமர்வில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 2007.10.26 அன்று, தொழில் நிமித்தம் மன்னாருக்குச் சென்ற எனது மகன் ச.சிவகுமாரை கடற்படையினர் சோதனைச்சாவடியில் வைத்து இறக்கி எடுத்தனர். அவரை பின்னர் விடுவிக்கவில்லை. பலமுறை அலைந்து அவர்களிடம் கேட்டபோதும், இறுதியாகக் கைது செய்ததை ஒத்துக்கொண்ட கடற்படையினர், அவரைத் தாம்விட்டுவிட்டதாகக் கூறினர். ஆனால், மகன் வந்து சேரவில்லை. இதுதொடர்பாக நான் பொலிஸிலும் முறைப்பாடுசெய்துள்ளேன்.

ச.அருள்சீலன் என்ற மூத்த மகனை, அலஸ்தோட்டம் முகாமில் வைத்து 2008.03.08ஆம் திகதி வந்த கடற்படையினர் பிடித்து, எனது கண்முன்னே கைகளைப் பின்னுக்குக் கட்டி முட்டுக்காலில் வைத்து கொண்டு சென்றனர். அவரும் இன்று வரை என்னவானார் என்று தெரியவில்லை.

மூன்றாவதாக ச.நிசாந்தன்  என்ற மகனை, 2008.07.05 அன்று, விகாரைவீதியில் வைத்து கைது செய்தார்கள். அவர், பெரிய கடையில் உள்ள கடையொன்றில் வேலை செய்துகொண்டிருந்தவர். விகாரைவீதியில் ஒரு வீட்டில் தங்கி வந்தவர். இவ்வாறு மூன்று ஆண்பிள்ளைகளையும் கைது என்று கொண்டு போனவர்கள்  கண்ணில் காட்டவே இல்லை.

நானும் தொடர்ந்து அலைந்து பல இடங்களிலும் முறையிட்டும் பயனில்லை.  எந்தவிதமான ஆதாரமும் இல்லை. எனவே, முதலில் எனது பிள்ளைகள் எனக்கு வேண்டும். எனது பிள்ளைகள் இருந்தால், நான் இன்று நின்மதியாக வாழும் சூழல் இருந்திருக்கும் இன்று நிற்கதியாக அலைகின்றேன் என, தெரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X