2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'10 பேர்ச் காணி போதுமானதா?'

Suganthini Ratnam   / 2016 மே 31 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட உப்பாறுக் கிராமத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றத்தின்போது, ஒவ்வொருவருக்கும்; 10 பேர்ச் படி காணி பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இருப்பினும், இக்கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து இடம்பெயர்ந்த மக்களில் பலர் ஏக்கர் கணக்கில் காணி வைத்திருந்தார்கள். இவர்களுக்கு நாம் என்ன நிவாரணம் வழங்கப் போகிறோம் என கிழக்கு மாகாணக்  கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி கேள்வியெழுப்பினார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது.இதன்போது, உப்பாறுக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு 10 பேர்ச் படி வழங்கப்படும் காணியை 20 பேர்ச்சாக அதிகரித்து வழங்க வேண்டும் என்பதுடன், இக்கிராமத்திலுள்ள அரசாங்கக் காணிகளில்; சில இடங்களில் பொதுத் தேவைக்கான கிராம மட்ட கட்டடங்கள் மற்றும் கைத்தொழில் பேட்டைகள் அமைக்க  வேண்டும் என்று எழுத்து மூலமான கோரிக்கையை  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்; முன்வைத்தார்.

இங்கு மேலும் தெரிவித்த மாகாணக் கல்வி அமைச்சர், 'இந்த மக்களின் பலர் ஏக்கர் கணக்காக காணிகளை வைத்துக்கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தனர்' என்றார்.

'மேலும், தற்போது இவர்களில் அநேகமானவர்கள் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர். இந்தப் 10 பேர்ச்  காணி அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு போதுமானதா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக உப்பாறுக் கிராம மக்கள் இடம்பெயர்ந்து, தங்களின் உறவினர் வீடுகளிலும் கிண்ணியா சின்னத்தோட்டம் மற்றும் மூதூர் பச்சனூர் நலன்புரி நிலையங்களிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், 26 வருடங்களின் பின்னர் கடந்த 20ஆம் திகதி இக்கிராமத்தில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 பேர்ச் படி 10 தமிழ்க் குடும்பங்களுக்கும் 47 முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஒரு பெரும்பான்மையினக் குடும்பத்துக்கும் காணிகள் வழங்கப்பட்டு, அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .