2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

'வட்டார எல்லைப் பிரிப்பில் பாரபட்சம்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில், வட்டார எல்லைப் பிரிப்பில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளமையினால், அதற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென, கிண்ணியா மஜ்லிஸ் ஸூரா ஏ.எம்.ஹிதாயத்துல்லாஹ் மௌலவி தலைவர் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக திருகோணமலை மாவட்ட சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிந்து, உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வது தொடர்பான கலந்துரையாடல், கிண்ணியா நகர சபை மண்டபத்தில், இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சிறுபான்மையினர் வட்டார எல்லைப் பிரிப்பில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால், பெரும்பான்மையினரைக் கொண்ட கோமரங்கடவெல பிரதேச சபைக்கு 5,831 வாக்காளர்களுக்கு 13 பிரதிநிதிகளும் 21,069 வாக்காளர்களைக் கொண்ட கிண்ணியா நகர சபைக்கு 10 பிரதி நிதிகளும் வழங்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கோமரங்கடவெலவுக்கு 450 வாக்காளருக்கு 1 பிரதிநிதியும் கிண்ணியா நகர சபைக்கு 2,100 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியும் என பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது' என்றார்.

மூதூர் பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்துவது தொடர்பாகவும் தோப்பூர், சம்பூர் பகுதிகளில் புதிய பிரதேச சபை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.

கிண்ணியா மஜ்லிஸ் ஸூராவின் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துல்லாஹ் மௌலவியின் தலைமையில்; இடம்பெற்ற இக்கூட்டத்தில், மூதூர், கிண்ணியா, தோப்பூர், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சமூக அமைப்புக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப், முன்னாள் கிண்ணியா நகரபிதா டாக்டர் ஹில்மி  மஹரூப், மதப் பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.      

       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .