2025 மே 15, வியாழக்கிழமை

கந்தளாய்க்குள வான்கதவுகள் திறப்பு; பல பகுதிகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, கந்தளாய்க்குளத்திலிருந்து வான்கதவுகள் திறந்து விடப்பட்டு 4 அடிக்கு மேல் நீர் பாய்வதால் வானாறு, முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் சூரங்கம் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கிண்ணியா தம்பலகாம் வீதி, கிண்ணியா வானலை வீதி ஆகிய வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கந்தளாய்க்குளத்திலிருந்து வெண்ராசன் குளத்திற்கு பாய்ச்சப்படும் நீர் நிரம்பி வழிகிறது. அத்துடன், கல்மெட்டியாவகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளது. 

திருமலை - கண்டி வீதி 96ஆவது, 97ஆவது  மைல்கல் பால வீதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு பயணம் செய்ய முடியாதளவுக்கு வெள்ளநீர்; பாய்வதுடன்,  மேற்படி பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.  இந்நிலையில், திருகோணமலைக்கான போக்குவரத்துக்கள் முள்ளிப்பொத்தானை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக இலங்கைத்துறையிலிருந்து  ஈச்சிலம்பற்றுக்கான போக்குவரத்தும் ஈச்சிலம்பற்றிலிருந்து வெருகலுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

இலங்கைத்துறை முகத்துவாரம், முற்றுச்சேனை, ஈச்சிலம்பற்று சந்தி, வட்டவான், மாவடிச்சேனை, பூநகர் ஆகிய பகுதிகளில் படகுச் சேவைகள் நடைபெறுவதுடன், அங்குள்ள மக்கள் படகுகள் மூலம் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.

மூதூர் கிழக்கு பகுதியில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கந்தளாய் சேருவில வீதியில் சூரியவௌ குளத்தின் மேலாக நீர் பாய்வதால் குளக்கட்டு உடைப்பெடுக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

திருமலை நகர்ப்புறத்தில் பல குழிகள் வெள்ளத்தில் நிரம்பிக் காணப்படுவதால் அங்கு சுகாதாரப் பிரச்சினை ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காணரமாக கிண்ணியா, கந்தளாய், திருகோணமலை, மூதூர் ஆகிய கல்வி வலயப் பாடசாலைகள் யாவும் இன்று மூடப்பட்டுள்ளன. சகல பாடசாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .