2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திருகோணமலை ப.நோ.கூ.சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவா)

திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஞ்சனி செல்வராஜா திடீரென பதவி குறைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டமையைக் கண்டித்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவிக்கையில்,

'திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஞ்சனி செல்வராஜாவிற்கான பதவி குறைக்கப்பட்டு கணக்கு தணிக்கை பிரிவு பதவிக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்தே நாங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

செல்வராஜா ரஞ்சனி திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக  பதவியேற்று ஒரு வருடத்தில் இரண்டு கோடி ரூபாய்  இலாபம் கூட்டுறவுச் சங்கத்திற்கு கிடைத்தது. இந்த இலாபத்தில் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் ஒவ்வொருக்கும் 1,200 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.

அத்துடன், பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை தற்போது இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனையும் நாம் கண்டிக்கிறோம்.  

ரஞ்சனி செல்வராஜா திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவியேற்பதற்கு முன்னர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 51 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்தது.

இவரின் இடமாற்றம் மற்றும் பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு தெரிவித்தமை குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கூட்டுறவு அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி திருகோணமலை மாவட்டத்திலுள்ள 32 பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கிளைகள், 2 மினி கோப்சிட்டிகள்  ஆகியனவும் மூடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X