2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூர் காணிகளை அத்துமீறி பயன்படுத்தும் படையினர்: நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ் மக்களின் நெற் செய்கைக் காணிகளை ஊர்காவற் படையினர் அத்துமீறி பயன்படுத்தி வருகின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசமானது கடந்த 1957ஆம் ஆண்டுக்கு முன் தமிழ், முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் சேருவில விகாரையைச்  சுற்றி சிறிதளவு சிங்கள குடும்பங்களை கொண்டதாகவும் இருந்தது. ஆனால் 1957ஆம் ஆண்டு அப்போது இருந்த அரசாங்கத்தால் திட்டமிட்ட தெகிவத்தை குடியேற்றம், 2ஆம் கொலணி என சிங்கள மக்களின் குடியேற்றங்கள் இடம்பெற்றன.

அதுமட்டுமின்றி 1958ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட 80 வீடுகளில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்களை குடியேற்றினர். இவர்களுக்கு அரசாங்கம் 12ஆம் வாய்க்கால் வரை நெற்காணிகளை கொடுத்து அதற்கான அனுமதிப்
பத்திரத்தையும் வழங்கியது.

ஆனால் மூதூர் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 13ஆம் வாய்க்கால், 14ஆம் வாய்க்கால், 15ஆம் வாய்க்கால், ஒட்டுப் படுகாடுகருக்கு, முதலைமடு ஆகிய கிராம தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நெற்காணி கிட்டத்தட்ட 1500 ஏக்கர் 1958ஆம் ஆண்டு வழங்கப்பட்டு அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது.

1958ஆம் ஆண்டு தொடக்கம் இவர்கள் இப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வேளை 2007ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் காணியில் தெகிவத்த விகாரையின் பிக்கு தலைமையில் ஊர்காவற்படை
(கோம்காட்) பிரிவினர் அத்துமீறிதமிழ் மக்களின் பகுதியில் நெற்செய்கை காணியை பிடித்து கமம் செய்கின்றனர்.

இதனால் அக்காணிக்கு பொறுப்பான தமிழ் மக்கள் நெற்செய்கை மேற்கொள்ள செல்லும் போது அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். இதுசார்பாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பலரிடமும் இம்மக்கள் முறையிட்டும் எதுவித
பயனும் கிட்டவில்லை. அத்துமீறி நெற்காணியை பிடித்தவர்கள் தருவதாக கூறியும் இதுவரை இக்காணியை இத்தமிழ் மக்களிடம் கையளிக்கவில்லை.

எனவே தயவு செய்து இவ்விடயமாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு இந்த நெற்காணியின் உரிமையாளர்களான இப்பகுதி தமிழ் மக்களிடம் இக்காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். தங்களது பதிலை அன்பாக கோருகின்றேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X