2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்படிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டார்களா?: சம்பந்தன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, இந்தியா மற்றும் நாடுகளுக்கு சென்றாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு எம்மிடம் தான் வரவேண்டும் என்று அரசாங்க அமைச்சர்கள் இப்போது கூறத்தொடங்கியுள்ளனர். அன்று  தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1957 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் இருந்த இலங்கை அரசாங்கங்களுடன் செய்து கொண்ட பண்டா-செல்வா உடன்படிக்கை மற்றும் டட்லி-செல்வா உடன்படிக்கை ஆகியவற்றுக்கு என்ன நடந்தன என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா? அவ் உடன்படிக்கைகளை கிழித்தெறிந்துவிட்டு தமிழ் மக்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது யார் என்பதை மறந்து விட்டார்களா?' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருகோணமலை நகர மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாநாயகத்தின் 35 ஆவது சிரார்த்த தினக் கூட்டத்தில்; உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தந்தை செல்வநாயகத்தின் பாதையில் தான் நாம் இன்று பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தந்தை செல்வாவுடன் அன்று செய்து கொண்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் இலங்கை அரசாங்கங்கள் சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருக்காது.

இலங்கை அரசாங்கம் இனியும் எங்களை ஏமாற்ற முடியாது. தமிழ் மக்களுக்கு நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வை இலங்கை அரசு முன்வைக்குமானால் நாம் அதனை நிராகரிக்க மாட்டோம். நாம் இன்று தந்தை செல்வா காட்டிய பாதையில் பக்குவமாகவும் நிதானத்துடனும் தான் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராசா, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் இ.விஜேந்திரன் மற்றும் வெருகல் பிரதேச சபையின் தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .