2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புத்தாண்டிலாவது பதவி உயர்வு, சம்பளம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்: இஸ்லாமிய ஆசிரியர்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சேவைப் பிரமாணக் குறிப்பு, பதவி உயர்வு மற்றும் சம்பளம் என்பன புத்தாண்டிலாவது கிடைப்பதற்கு இலங்கை அரசாங்கம்  நடவடிக்கை  எடுக்கவேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அதிபர், ஆசிரியர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகள் இன்றி பல வருடங்களாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு அதிபர், ஆசிரியர்கள் ஏற்கும் வகையில் இவை அனைத்தும் கிடைத்து அவர்களது வாழ்வு சிறக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் வகை செய்ய வேண்டும்.

2008.09.08ஆம் திகதி உயர் நீதிமன்றத் தீர்ப்பின்போது இணங்கிக்கொண்டதற்கமைய 2008.07.01ஆம் திகதி முதல் அமுலாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளுக்கான புதிய சேவைப் பிரமாணக்குறிப்புக்கள் இதுவரை அமுலாக்கப்படவில்லை. பதிலாக 28/2010ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம் அதன் அமுலாக்கத் திகதியை 2011.01.01 இற்;கு பிற்போட்ட அரசு, 2012 ஒக்டோபர் 06ஆம் திகதி உலக ஆசிரியர் தினத்திலாவது அதனை வெளியிட முன்வரவில்லை.

இருந்தபோதும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டாவது நாளில் உயர் கல்வி மற்றும் தொழில்த் தகைமையை அடிப்படையாகக் கொண்டு, துரித பதவி உயர்வு என்ற தலைப்பில் 2008.09.10இல் ஊடக விளம்பரம் ஒன்றை வெளியிட்டு அதிபர், ஆசிரியர்களின் மிதமிஞ்சிய அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம் அதனை 6/2006 (VIII) ஆம் இலக்கச் சுற்றறிக்கையாக 2010.01.05இல் வெளியிட்டிருந்தது.
சேவைப் பிரமாணக்குறிப்பு வெளியிடப்படாமையினால் இதுவரை அச்சுற்றறிக்கை அமுல் செய்யப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது.  இந்தச் சேவைப் பிரமாணக்குறிப்பு தொடர்பில் 2011.09.22இல் தொழிற்சங்கங்களின் அபிப்பிராயமும் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிவந்த 2/97 சுற்றறிக்கை மூலம் தோற்றுவிக்கப்பட்ட சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு காணக் கோரி, நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய, ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு - குறுகிய காலம் மற்றும் நீண்டகால பிரதிலாபங்கள் என்ற ஆரவாரத்துடன் வெளிவந்த 6/2006 (VIII) ஆம் இலக்கச் சுற்றறிக்கையும் இன்னும் கிடப்பிலேயே உள்ளது.

எனவே, இது சம்பந்தமாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வு சிறப்பதற்கு வழிசமைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .