2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; கடற்படை சிப்பாய் மீது சந்தேகம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மாவட்டம்- குச்சவெளி பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர், கடற்படைச் சிப்பாய் என சந்தேகிக்கபடும் நபரொருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த நபர் கடற்படை முகாமில் பணியாற்றும் சமையல்காரர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது,

திரியாய் கடற்படை முகாமுக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த சிறுமியின் வீட்டிற்கு கறிவேப்பிலை தேவை எனக்கூறி வந்துள்ள இந்நபர், சிறுமியைத் தூக்கி மடியில் இருக்கச்செய்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதனை அவதானித்த சிறுமியின் 12 வயது சகோதரி சத்தம்போட்டு தாயை வரவழைக்க, அந்நபர் கடற்படை முகாமுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை ஒரு வருடமாக சீருடையிலும் சிவில் உடையிலும் தான் கண்டுள்ளதாக கூறும் குழந்தையின் தந்தை, சம்பவத்தின் போது சிவில் உடையில் தான் அவர் வந்ததாகவும் தெரிவிக்கின்றார்.

மேற்படி நபரை கடற்படைச் சிப்பாய் என குழந்தையின் தந்தை சந்தேகம் வெளியிட்டாலும், பொலிஸ் காவல்துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண அந்நபர் முகாமின் சமையல்காரன் என பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக திருகோணமலை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அந்நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X