2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் நல்லிணக்கத்திற்கு முரணானது: ஆசிரியர் சங்கம்

Menaka Mookandi   / 2014 மே 23 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருமலை, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனமானது, நல்லிணக்கத்திற்கு முரணானது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மூதூர் கல்வி வலயப் பணிப்பாளர் நியமனத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பி.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'திருகோணமலை மாவட்டத்தில் அதிக தமிழ் பாடசாலைகளைக் கொண்ட மூதூர் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, நிருவாக குளறுபடிகள் காரணமாக முறையான விசாரணைக்குட்பட வேண்டிய சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர், மூதூர் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கும் பன்மைத்துவ இனங்களின் மொழி மற்றும் கலாசார உறவுகளுக்கும் முரணானது.

மூதூர் கல்வி வலயம் பின்தங்கியிருந்தவேளை, திறமையானதும் கல்வி வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம், கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெளிவாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தருகின்ற நிலைப்பாடாக சங்கம் கருதுகிறது.

கிழக்கு மாகாண அமைச்சரவையின் தீர்மானத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் முறையான விசாரணைக்காக இடமாற்றம் செய்யப்பட்ட சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் மூதூர் கல்வி வலயத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பது சனநாயக சமூகமொன்றிலுள்ள மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றினை நிச்சயப்படுத்துவதனை வேண்டி நிற்கிறது.

தேசிய ஐக்கியத்திற்கான நடவடிக்கைகளுக்கு கலாசார உறவுகள் மிக முக்கியமானவை எனக் கருதப்படுவதனால் இந்த நியமனமானது சமத்துவக் கோட்பாட்டை மீறுகின்ற ஒருதலைப்பட்சமானதுமாகும்.

மூதூர் கல்வி வலயத்தில் 2014.05.19 இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளரை மீண்டும் அவ்வலயத்திற்கு நியமிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் முன்வரவேண்டும்.

சனநாயக அரசு ஒன்றில் நல்லாட்சி என்பது திறமையானதும் பயன் தருவதுமான நிருவாக அமைப்பு ஒன்றின் விளைவு என்பதினை மேலான கருத்தில் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண கல்வி புலத்தில் கூடியளவு வெளிப்படைத் தன்மையும் வகை கூறுதலையும் வழங்கக்கூடிய சட்ட அமைப்புக்களை உருவாக்க வேண்டிய தேவையொன்றுண்டு என்பதினை இந்த நியமனம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0

  • Nijamudeen Friday, 23 May 2014 09:45 AM

    இதை நீங்கள் ஏன் பிரச்சினையாகப் பார்க்கின்றீகள். இதை ஒரு பிரச்சினை அற்ற விடயமாக நினைத்தால் வாழ்வில் எல்லாமே பிரச்சினை அற்றதாக மாறும்.

    Reply : 0       0

    Thirisadai Wednesday, 04 June 2014 03:14 AM

    தங்களுடைய வலயத்தில் எத்தனை ஆசிரியர் இடம்மாறி இடர்பட, அதை விட்டு இதனை பெரிதாக காட்டுவது தங்களுடைய இயலாமையும் பெயர் பிரபல்யமும்...

    Reply : 0       0

    Thirisadai Thursday, 05 June 2014 03:03 AM

    இது உங்கள் விளம்பரத்துக்கான செய்தி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X