2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகருக்கு சம்பூர் மக்கள் கடிதம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

சம்பூரில் இடம்பெயர்ந்தோர் சார்பாக அம்மக்கள், இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வன் சிங்ஹாவுக்கு வெள்ளிக்கிழமை (09) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

திருகோணமலை மூதூர் கிழக்கு கூனித்தீவு கிராமத்திற்கான இந்திய வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வுக்கு வெள்ளிக்கிழமை (09) இந்திய உயர்ஸ்தானிகர் வருகைதந்திருந்தார்.

அவரிடம் இந்த கடிதத்தை நேரடியாக கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமையினால் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக அம்மக்கள் தெரிவித்தனர்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 2006 இடம் பெயர்ந்து இன்றுவரை அகதி முகாம்களில் வாழும் சம்பூர் மக்களின் சார்பில் இக் கடிதத்தை கையளிக்கின்றோம். எமது அண்மைக் கிராமங்களான கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக் குடா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தினை வழங்கி அதனை ஆரம்பித்து வைக்க வந்த தங்களுக்கு எமது மனமுவர்ந்த நன்றிகளையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதே வேளை கடந்த ஒன்பது வருடங்களாக அகதி முகாம்களில் அல்லலுறும் சம்பூர் மக்களின் துயரத்தையும் தாங்கள் கவனத்திலெடுக்க  வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 825 குடும்பங்கள் நான்கு நலன்புரி நிலையங்களிலே அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுகின்றோம். கூனித்தீவு நோக்கிப் பயணிக்கும் போது அழிவடைந்து கிடக்கின்ற கடற்படை முகாம்களால் சூழப்பட்டுள்ள சம்பூர்க் கிராமத்தினூடாகத்தான் தாங்கள் செல்வீர்கள்.

அங்குதான் எமது பாரம்பரிய புராதன கிராமமும் ஆலயங்கள் பாடசாலைகள் குடியிருப்புகள் என அனைத்து வளங்களும்  அமைந்திருந்தன. இப் பகுதியிலேயே நாம் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தோம். தற்பொழுது அகதி முகாம்களில் அல்லலுறுகிறோம். சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை முன்னிறுத்தியே எமது குடியேற்றம் மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் எமது குடியிருப்புக்கள் அமைந்த பகுதிக்கும் அனல் மின் நிலையத் திட்டத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. கடற்பiடை முகாம் காரணமாகவே மீள்குடியேற்றம் தடைப்படுகின்றது. எனவே தயவுசெய்து இவ் விடயங்களை கவனத்தில் எடுத்து எமது மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தி எமது கிராமத்தில் நாம் மீண்டும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ உதவுமாறும் எமது குடியேற்றத்தின் பின் எமக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்க ஏற்ற ஒழுங்குகளைச் செய்ய வழிகோலுமாறும் பணிவுடனும்,தயவுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X