2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பூநகர் விவசாயிகள் போக்குவரத்துச் செய்வதில் சிரமம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பூநகர் பகுதி விவசாயக்கண்டத்தில் சுமார் 2,000 ஏக்கர் நெற்செய்கையில் ஈடுபடும் 900 விவசாயிகள் போக்குவரத்து வசதியீனங்களை எதிர்நோக்குவதாக பூநகர்ப்பகுதி விவசாய சம்மேளனத் தலைவர்கள் தெரிவித்தனர்.

பூநகரையும் கிண்ணையடி, இலங்கைத் துறைமுகத்துவாரம், கறுக்காமுனை, ஈச்சிலம்பற்று மற்றும் விநாயகர்புரம் ஆகிய கிராமங்களை இணைக்கும் கட்டையாறுப்பாலமும் கட்டையாறுப்பாதையும் போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் இல்லாததால், தாங்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக வளர்மதி விவசாய சம்மேளனத் தலைவர் ஏ.சந்திரமோகன் மற்றும் உபதலைவர் வி.நாகேந்திரனும் கூறினர்.

நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் வரும் கட்டையாறுப்பாலமும் கட்டையாறுப்பாதையும் பல வருடகாலமாக சீர் செய்யப்படாமல் இருந்துவருகின்றன.

கட்டையாறுப்பாலத்தினூடாக சைக்கிள்களிலும்  கால்நடையாகவுமே பயணிக்கமுடியும். மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது ஆபத்து என்றபோதிலும் கூட, தவிர்க்கமுடியாத காரணங்களால் பாலத்தின் மேலால் விவசாயிகள் மோட்டார் சைக்கிள்களிலும் மூட்டைமுடிச்சுகளோடு பயணிக்கிறார்கள்.

கட்டையாறுப்பாலத்தின் மேலால் உழவு இயந்திரங்கள், லொறிகள், எல் ரக வாகனங்கள், வான்கள், மாட்டுவண்டிகள் பயணிக்கக்கூடியவாறு இந்தப்பாலம் அகலப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுமாக இருந்தால், இந்தப்பாதையை பயன்படுத்தும் சுமார் 900 குடும்பத்தவர்கள் நன்மையடைவார்கள் என வளர்மதி விவசாய சம்மேளனத்தின் உபதலைவர் வி.நாகேந்திரன் தெரிவித்தார்.

தற்சமயம் இந்தக் கட்டையாறுப்பாலத்தின் மேலால் வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகள் பயணிக்க முடியாதிருப்பதனால் நெல், பசளை, பால் மற்றும் விவசாய உபரணங்களை ஏற்றிவருவதற்காக பூமரத்தடிச்சேனை, ஈச்சிலம்பற்று, வப்பியாசந்தி, பூமரத்தடிச்சேனை ஆகிய சுற்றுவழிப்பாதையூடாக மேலதிகமாக 15 கிலோமீற்றர் தூரம் பயணித்தே தமது நெல்வயல்களை சென்றடைய வேண்டியிருக்கின்றது என பூநகர்ப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், மழைவெள்ள காலங்களில் கூட தற்போது நல்ல நிலையிலுள்ள ஏனைய பாதைகளின்; மேலால் வெள்ளநீர் கரைபுரண்டோடும்பொழுது கிராம மக்கள் இந்தக் கட்டையாறுப்பாதையையே தமது போக்குவரத்துக்கு பாவிப்பதுண்டு.

அவ்வாறுள்ள மக்கள் போக்குவரத்துப் பாதையை அதிகாரிகள் அபிவிருத்தி செய்துதர வேண்டும் என்று கிராம மக்களும் விவசாயிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பராமரிப்பிலுள்ள கட்டையாறுப்பாலம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற விவசாயிகளின் வேண்டுகோள் பற்றி மூதூர்ப்பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.ராஜ்குமாரிடம் கேட்டபோது, கட்டையாறுப்பாலத்தை விரிவாக்கவேண்டும் என்ற வேண்டுகோள்; விவசாயிகளால் விடுக்கப்படுகின்றபோதிலும், தற்போதைக்கு அந்த வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றக்கூடிய நிதி ஒதுக்கீடுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் இல்லை என்று கூறினார்.

எனினும், குறுகலாக உள்ள கட்டையாறுப்பாலமும் பாதையும் அகலமாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டால், அதனால்,  ஆயிரக்கணக்கான விவசாயிகளும் கிராமவாசிகளும் அதிக நன்மையடைவார்கள் என்பதையும் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ராஜ்குமார் சுட்டிக்காட்டினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X