Suganthini Ratnam / 2015 மார்ச் 10 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
'தற்காலத்தில் எமது உணவுகளில் இரசாயனப்பயன்பாடு அதிகரித்துவருகின்றது. விவசாயத்தில் விஞ்ஞானமுறை கலந்து அனைவரும் நஞ்சை உட்கொள்கின்றோம். அந்தளவுக்கு விவசாயத்தில் இரசாயனத்தை கலந்திருக்கின்றோம். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு எதிர்நீச்சல் போடவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்' இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலையில் திங்கட்கிழமை (9) தனது அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இரசாயனப்பயன்பாடு மெத்திப்போய் இருக்கின்றது. இதற்கும் நாம் மாற்றுவழிகளை கண்டுகொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம். மேலும், கடல் உணவுகளில் சிறிய மீன்களை உட்கொள்வதே நஞ்சுத்தன்மை அற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து மண் முழுக்கமுழுக்க நைதரசன் வளமுள்ள மண்ணாக மாறிவிட்டது.
கிழக்கு மாகாணம் விவசாயத்தின் இதயமாக இருக்கின்ற மாகாணம். இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று அண்மையில் திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் நெற்களஞ்சியம் கிழக்கு மாகாணத்திலேயே இருந்தது. அந்தப் பெயரை நிலை நாட்டவேண்டிய பொறுப்பு இந்த அமைச்சுக்கு இருக்கின்றது.
பல்வேறு சவால்கள் இந்த விவசாய அமைச்சில் உள்ளன. கால்நடை அமைச்சில் பல சவால்கள். எமது கால்நடை வளர்ப்பாளர்கள் மிகப்பெரிய துன்பத்துக்குள்ளாகி இருக்கின்றார்கள். மிகப்பெரிய சட்டமீறல் மிகப்பெரிய மறைமுக ஆதரவோடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் மாகாணசபையில் பல தடைவைகளில் பேசியிருக்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .