2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அனைத்து இனத்தவரும் கட்சி பேதங்களின்றி வாழ்கின்றனர்

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

இலங்கை சுதந்திரமடைந்த போது அமைக்கப்பட்ட அரசவையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேகர், மலேயர் என அனைத்து இனத்தவரும் கட்சி பேதங்களின்றி இருந்தனர். அது போன்ற ஒரு நிலை இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது என பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை ஏற்பாடு செய்த உற்பத்தித் திறன் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை, திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

சுதந்திர காலத்திலிருந்த அரசாங்கத்தின் முழு நோக்கம் நாட்டை வளப்படுத்தி மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதேயாகும்.

அது போன்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இலங்கையின் முதல் நிதியமைச்சரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது முதலாவது வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்ட விடயங்களை பாராளுமன்ற நூலகத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

ஆசியாவில் ஜப்பான் தான் எம்மை விட முன்னேறிய நிலையில் உள்ளது. அதனை விஞ்சும் வகையில் எமது பொருளாதாரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

இன்று பல நாடுகள் எம்மை விட முன்னேறிவிட்டன. நாம் இந்தளவு முன்னேற்றத்துக்கு காரணம் நமது நாட்டில் தேசியக் கொள்கையும் சமாதான சௌபாக்கியமும் இல்லாமை தான். இந்த உண்மையை இப்போது நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம் என்றார்.

நாம் பாரியளவு அரச சேவையாளர்களைக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் தற்போது 14 இலட்சம் அரச சேவையாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கான சம்பளமாகவும் ஓய்வூதியமாகவும் வருடாந்தம் 800 மில்லியன் ரூபாய்களைச் செலவிடுகின்றோம். எனவே, அரச சேவையை வினைத்திறன் உள்ள சேவையாக முன்னேற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது.

அதற்கான முன்னெடுப்புகளை நாம் செய்து வருகின்றோம். நாட்டிலுள்ள நாடளாவிய சேவையாளர்கள் இப்போது எமது அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி இவர்களது வினைத்திறனை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X