2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கல்வி நிலையைப் பற்றிப் பேசுவதற்கு உதுமாலெப்பைக்கு தகுதியில்லை

Niroshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,ரீ.கே.றஹ்மத்துல்லா

மாகாண சபையிலிருந்து கடந்த காலத்தில் அக்கரைப்பற்றின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான உதுமாலெப்பைக்கு, இன்று அக்கரைப்பற்று கல்வி நிலையைப் பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை  அமர்வு செவ்வாய்க்கிழமை(23) காலை கூடிய போது மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் கொண்டு வந்த தனி நபர் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்து உரையாற்றகையில்,

கடந்த காலத்தில் ஏ.எல்.இக்பால் எனும் அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு பாடசாலையின் அதிபராக நியமனம் வழங்கப்படுவதற்காக தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நியமனக் கடிதத்தை, குறிப்பிட்டவர் மாற்று அரசியல் கருத்துடையவர் என்பதற்காக தடுத்து நிறுத்தியவர்தான் இந்த உதுமாலெப்பை.

அதேபோல, ஏ.எம்.சித்தீக் எனும் உடற்பயிற்சி ஆசிரியர், வேறு கட்சியொன்றின் ஆதரவாளர் என்ற காரணத்துக்காக ஒரு மாத காலத்தினுள் ஆறு தடவைகள் இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டு, இறுதியில் அக்கரைப்பற்று வலயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறி இன்று திருக்கோவில் வலயத்தில் கடமையாற்றுகிறார். ஆனால், அக்கரைப்பற்றில் இன்று கடுமையான உடற்பயிற்சி ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணமும் இவர்தான்.

அக்கரைப்பற்றுப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி பாடசாலைகளை ஆளணி மற்றும் பௌதீக வளத் தட்டுப்பாட்டில் விட்டு விட்டு, நியாயமாக இப்பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய வளங்களை, தனக்கு வேண்டிய சில இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கி, அக்கரைப்பற்றின் கல்வியை பின்னடயச் செய்வதில் பின்னணியில் இருந்தார்.

இப்படியாக அக்கரைப்பற்று கல்விக்கு உதுமாலெப்பை செய்த அநியாயங்களை அடுக்கிக் கொண்டு செல்ல முடியும். அப்படி இருக்கும் போது, அக்கரைப்பற்றில் ஒரு பாடசாலையில் அரசியல் செய்த அதிபரை, அதுவும் அவரே உத்தியோகபூர்வமாக இடமாற்றக் கடிதம் வழங்கிய ஒரு அதிபரின் இடமாற்றத்தையும் பொத்துவில் கோட்டத்திலிருந்து சுயவிருப்பத்தின் பேரில் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு வழங்கப்பட்ட அதிபரின் இடமாற்றத்தையும் பற்றி பேசுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
 

ஊடகங்களில் தனது பேச்சு வர வேண்டும். அதனூடாக தனது அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டுமென்ற உதுமாலெப்பையின் அரசியல் வங்குரோத்துத்தனத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .