2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘சமூகப் பணி டிப்ளோமாதாரிகளுக்கு அரச துறையில் நியமனங்கள் வழங்க வேண்டும்’

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

சமூகவலுவூட்டல் நலன்புரி கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின், இலங்கை சமூக சேவைக் கல்லூரியால் நடாத்தப்பட்டு வருகின்ற இரு வருட டிப்ளோமாதாரிகள் டிப்ளோமாவை பூர்த்தி செய்தர்களுக்கான நியமனத்தை அரச துறையில் பெற்றுக் கொடுக்கவேண்டுமென, கிழக்கு மாகாண தொழில்வாண்மையான சமூகப் பணியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கையில் அதன் தலைவர் தி.ஹரிஸ்ரன் தெரிவித்ததாவது,

“இரு வருட டிப்ளோமாவான சமூகப்பணி டிப்ளோமாவை இராஜகிரியவில் உள்ள சமூகப்பணிக் கல்லூரியில் பூரத்தி செய்து நான்கு வருடங்கள் கடந்தும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கான அரச துறையில் இது வரைக்கும் நியமனம் கிடைக்கப் பெறவில்லை.

“இவ்விடயம் தொடர்பில் கடந்த கால அரசாங்கம் தொடக்கம் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வரை பல்வேறு பல தடவைகள் உரிய மாகாண மத்திய அரசிடம் அமைச்சிடம் முன்வைத்தபோதிலும், தங்களுக்கான நியாயபூர்வமான சாதகமான பதில் கிட்டவில்லை.

“இந்த சமூகப்பணி டிப்ளோமாவை அரசாங்கம் முதன்மைப்படுத்த வேண்டும் மாகாண அமைச்சுக்கள் ஊடாகவும் மத்திய அமைச்சுக்கள் ஊடாகவும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு அரச துறையில் கல்வித்தகைமைகளாக சேர்க்க வேண்டும்.

“கிழக்கு மாகாண ஆளுநர் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இதுபற்றி ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும்.

“கிழக்கு மாகாண சபை பொதுச்சேவை ஆணைக்குழுவால் விளையாட்டு உத்தியோகத்தர் பதவிக்கு இது தொடர்பான டிப்ளோமா தகைமையாக கொள்ளப்பட்டு, ஆட்சேர்ப்பு நடைபெற்றது. அதேபோன்று, குடியேற்ற உத்தியோகத்தர் பதவிக்கான விவசாய டிப்ளோமாவை தகைமையாகக் கொண்டு நியமனங்கள் வழங்கப்பட்டபோதிலும் இவ்வாறான அரச டிப்ளோமாக்கள் சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்காக ஏன் தகைமையாகக் கொள்ளப்படுவதில்லை.

“அரச துறைப் பாடநெறியாக அங்கிகரித்தபோதிலும், இவ்வாறான டிப்ளோமாதாரிகள் அரச துறை நியமனங்களின் போது புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

“இவ்விடயம் தொடர்பில் சமூகப் பணிக்கல்லூரியின் பணிப்பாளர் உட்பட மத்திய சமூக சேவை அமைச்சும் இப்பாடநெறிக்கான சாதகமான தகைமையாக தேசிய மாகாண அரசுகளுக்கு தெரியப்படுத்தி தகைமைகளாக சேர்க்க நடவடிக்கை எடுக்கவும்.

“கிழக்கு மாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் இது தொடர்பான போட்டிப்பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரலின் போது, சமூகப் பணி இருவருட முழுநேர டிப்ளோமா கவனத்தில் கொள்ளப்படுவதுடன், சமூக சேவை பதவிக்கான வெற்றிடங்களை நிரப்பும்போது முன்னுரிமையாக இது மாத்திரமே தகைமையாக கொண்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X