2025 மே 08, வியாழக்கிழமை

பொலிஸுக்குச் சென்று திருப்புகையில் பட்டப்பகலில் கொள்ளை

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா பொலிஸ்  நிலையத்தில் இருந்து, பணத்தைப் பெற்றுக் கொண்டு, மோட்டார் சைக்கிளில்  வீடு திரும்பிக் கொண்டிருந்த மரக்கறி வியாபாரியை,  கிண்ணியா, மாஞ்சோலைப் பாலத்தில் வழிமறித்து, அவரிடம் இருந்த ஒரு இலட்சத்து அறுபதாயிரம்  ரூபாயை, இரு இளைஞர்கள்  அபகரித்துச் சென்ற சம்பவம், நேற்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த மரக்கறி வியாபாரிக்கு, முனைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கடை முதலாளி  2,85,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்.

குறித்த தவணையில், அந்த முதலாளி பணத்தைக் கொடுக்காததனால்,  தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டதாகவும் அவரிடம் இருந்து பணத்தைப் பெற்றத் தருமாறும்     பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கிணங்க, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, பணத்தை மீளக் கொடுப்பதற்காக  நேற்றைய நாளைத் தீர்மானித்தனர்.

இதன்படி, கடை முதலாளி தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு, 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு காசோலையும்   65 ஆயிரம்  ரூபாய்க்கு மற்றுமொரு காசோலையுமாக  மொத்தம் இரண்டு காசோலைகளையும் மீதிப் பணமாக 1,60,000 ரூபாயையும் நேற்றுக் காலை, கிண்ணியா பொலிஸில் ஒப்படைத்து விட்டு, வீடு சென்றிருக்கிறார்.

இதன் பிறகு பொலிஸார், மக்கறி வியாபாரியை அழைத்து, குறித்த காசோலையையும் பணத்தையும் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இவற்றைப் பெற்றுக் கொண்ட மரக்கறி வியாபாரி, மாஞ்சோலை பாலத்தினூடாக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அவரைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த இரு இளைஞர்கள், அவர் அருகே சென்று, கையில் இருந்த  பணப் பையை அபகரித்துச் சென்றுள்ளார்கள்.

பணத்தைப் பறிகொடுத்த முதலாளி, சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரைக்கும் மோட்டர் சைக்கிள் மூலம் அவர்களைத் துரத்திச் சென்றுள்ளார்.

இதன்போது,  கிண்ணியா, கட்டையாறு பதியிலுள்ள ஓர் ஒழுங்கையில் மதில் ஒன்றில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, இளைஞர்கள் இருவரும் தப்பித்துச் சென்றுள்ளார்கள்.

மேற்படி இளைஞர்கள் குறித்து, கிண்ணியா பொலிஸார், தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X