2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மூதூர் விவகாரம்: ஆளுநரின் கவனத்துக்கு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஆசிரியர்களோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ள கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம், மூதூரில் நடந்த விரும்பத் தகாத விவகாரத்தை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளது.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடம்மாற்றக்கோரி மூதூர் வலயக் கல்விப் பணிமனை முன்னால் திங்கட்கிழமை ஒன்றுகூடிய  ஆசிரியர்களும், மாணவர்களும் பாரிய ஆர்பாட்டமொன்றை ஆரம்பித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் கவனத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளதோடு இன்று (14)இது தொடர்பான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் மீது மூன்று குற்றச் சாட்டுக்களை  முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் அக்கறை கொண்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில், வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசுதல், ஆசிரியர்களை தொழுகைக் கடமையைச் செய்ய விடாது தடுத்தல், கற்கக்கூடிய மாணவர்களுக்கே கற்பியுங்கள் என்று அசிரத்தையான உத்தரவிடல் போன்ற மூன்று பிரதான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று பிரச்சினைகளும் ஆசிரியர்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

எனவே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஸ்தாபன விதிக்  கோவைக்கமைவாக வலயக் கல்விப் பணிப்பாளரை விசாரணைக்குட்படுத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரது கடமையாகும்.

அதேவேளை மறுபுறம், ஆசிரியர்களோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதற்கு எதிர்ப்புக் காட்டுவதற்கும் மாணவர்களை முழுமையாகப் பயன்படுத்தி அவர்களைத் தெருவுக்கு இழுத்து வந்து, வெயிலில் நிற்க வைத்து அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது, எந்தவகையில் நியாயமானது? ஒழுக்கம் மற்றும் முன்மாதிரி என்ற விழுமியங்களின் அடிப்படையில் மாணவர்களை இவ்வாறு பயன்படுத்துவது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.

தங்களுக்கேற்படும் பிரச்சினைகள் தேவைகள் குறித்து அதனைத் தீர்த்துக் கொள்வதற்கும் வெளிக்காட்டுவதற்கும் ஆசிரிர்களுக்கு எத்தனையோ மாற்று வழிமுறைகள் இருக்கின்றன.
அவற்றைக் கைவிட்டு தவறான முன்னுதாரணமாக மாணவர்களைத் தவறான நெறிப்படுத்தலில் வழிநடத்துவது வேதனையாகவுள்ளது.

எனவே, இத்தகைய ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் சென்ற மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை விசாரணை செய்து நியாயம் பெற்றுத் தரப்பட வேண்டும்.

இதனை செய்ய, கிழக்கு மாகாண கல்வியமைச்சு தவறும்பட்சத்தில், இந்த விவகாரத்தை பாரதூரமாக எடுத்து, ஆளுநரின் கவனத்துக்குக்  கொண்டு செல்ல, கிழக்கு மாகாணத்  தமிழாசிரியர் சங்கம் தயங்காது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .