2025 மே 21, புதன்கிழமை

முஸ்லிம் கட்சிகளுக்குள்ளே ஏற்பட்டுள்ள மோதல் கேவலமாக உள்ளது

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்,எம்.சி.அன்சார்

“முஸ்லிம்கள், சமாதானத்தின் விரோதிகள் அல்ல. இந்த நாட்டில் முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் என்று எப்போதுமே காட்டப்படுகின்றவர்கள். இந்த விடயம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற விடயம்”  என தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்,கலாநிதி றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான  எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய அரசில் கட்டுரைகளின் தொகுப்பான 'முஸ்லிம் அரசியலின் இயலாமை' எனும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(21) மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் அல்ல என்ற கருத்தை நூறுல் ஹக் இந்தப் புத்தகத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

இலங்கையின் முஸ்லிம் அரசியல் கள நிலவரங்களையும் முஸ்லிம் சமூகம் எதிநோக்குகின்ற பிரச்சினைகளையும் 'முஸ்லிம் அரசியலின் இயலாமை' என்ற இந்தப் புத்தகத்தில் நூறுல் ஹக் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேவேளை, முஸ்லிம் அரசியல் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கின்றார்.   

எழுத்தாளர் நூறுல் ஹக், முஸ்லிம் அரசியலுக்கப்பால் பகுத்தறிவு வாத சிந்தனையிலும் அவரது கவனம் செலத்தப்படுகின்றது. இருந்தபோதிலும் மிகவும் நிதானமாக முஸ்லிம் அரசியலை அவர் ஆராய்ந்து பல விடயங்களை வெளிக்காட்டியிருப்பது அவருது அரசியல் ஆளுமையை படம் போட்டுக்காட்டுகின்றது.

இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன் பல விடயங்களை எடுத்துக் காட்டாகச் சொல்ல  வேண்டியிருக்கின்றது. ஒன்று இந்த நாட்டின் அரசாங்கத்தின் நிலை அல்லது இந்த நாட்டின் நல்லாட்சி பற்றி கொண்டிருக்கின்ற அபிப்பிராயம் என்ற ஒரு கோதாவிலே இலங்கை மக்களை ஒரு சமூகமாக எடுத்துக் கொண்டு அதனை விசுவாசமாகப் பார்கின்ற நிலை.

இரண்டாவதாக, தமிழர்களுடைய அரசியலோடு பேசிப்பார்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. மிகப்பக்குவமாக இந்த விடயத்தை கையாளுவதிலே முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மிகவும் அவதானமாக கையாண்டு வருகின்றது அதன் அண்மைக்காலப் போக்கு இதற்கு உதாரணமாக எடுத்துக்காட்ட முடியும்.

மூன்றாவது விடயம் முஸ்லிம் அரசியலுக்குள்ளே முஸ்லிம் கட்சிகளுக்குள்ளே இருந்து பார்க்கின்ற விடயம். நான்காவது விடயம் முஸ்லிம் தனியான ஓர் அரசியல் கட்சிக்குள்ளே பார்கின்ற ஒரு விடயம்.

இப்போது நாம் எல்லோரும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒன்றுபட வேண்டுமென்று மிகவும் அக்கறையோடு பேசிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால், அதன் உச்சரிப்பு, தொனிப்பு இந்த நாடு முழுக்க முஸ்லிம் சமூகத்தின் அவாவாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற போது, முஸ்லிம் கட்சிகளுக்குள்ளேயே தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலே மோதல்களாக இன்றைய முஸ்லிம் அரசியல் மாறியிருக்கின்ற அவலத்தை நாங்கள் என்ன என்று சொல்வது. இது முஸ்லிம் காங்கிரஸூக்குள் மட்டுமல்ல, அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்குள்ளும் பரவியிருக்கின்றது.         

தேசிய அரசியலிலும் இந்த நிலை உருவானது. மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபாலவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கும் ஏற்பட்ட நிலையும் இதுதான். இந்த நிலைமையின் இறுதி நிலைமை முஸ்லிம் அரசியலுக்குள்ளும் ஆக்கிரமித்திருக்கின்றது.

முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும், சுதந்திரமாகப் பேசவேண்டும், அவர்கள் ஒருமித்த குரலில் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளைப் பேசவேண்டும், தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்க அவர்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்ற கேவலமான நிலைக்கு முஸ்லிம் அரசியல் வந்திருக்கின்றது இதற்குத் தீர்வுகாண வேண்டிய அவசியம் வந்திருக்கின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X