2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யானை - மனித மோதலை கட்டுப்படுத்த பயிற்சிப்படை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்

மனித - யானை மோதலைக் கட்டுப்படுத்தவும் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும் "யானை வேலி பயிற்சிப் படை" ஒன்றை கிழக்கு மாகாணத்தில் நிறுவ ஆளுநர் அநுராதா யஹம்பத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் டொக்டர் பிருதிவிராஜ் பெர்ணான்டோவின் பங்கேற்புடன், திருகோணமலை  மாவட்ட செயலகத்தில் இதன்கான முதற்கட்ட கலந்துரையாடல், நேற்று (15) நடைபெற்றபோது, கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில்  தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

யானை வேலி மிகப்பெரிய செலவில் கட்டப்பட்டு வருவதாகவும் முறையற்ற முறையில் அவை பராமரிப்பதால் யானை மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 

அத்துடன், மின்சார வேலி சரியாக கட்டப்படவில்லை எனவும் இவற்றுக்குத் தீர்வாக, யானை வேலியைப் பாதுகாக்க உள்ளூர் மட்டத்தில் ஒரு சிறப்புப் படையை நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. 

விவசாய  சங்கத்தின் பிரதிநிதி ஒருவர், சிவில் பாதுகாப்புப் படையின் இரு உறுப்பினர்கள், பிரதேச செயலகத்தின் பிரதிநிதி, கிராம அதிகாரி மற்றும் வனவிலங்கு துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஆகியோர் இந்தப் படைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

படைகளின் மேற்பார்வை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலகம் மூலம் செய்யப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட யானைப் பயிற்சி படையினருக்கான சிறப்புப் பயிற்சியை, டொக்டர் பிருதிவிராஜ் பெர்ணான்டோ, எதிர்வரும் மார்ச் மாதம், 02ஆம் மற்றும் 03ஆம் திகதிகளில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் கும்புறுப்பிட்டி யானை வேலி வளாகத்தில் நடத்தவுள்ளார். 

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழ், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இதனை நிறுவுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .